PUBLISHED ON : மார் 04, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் ராஜா: சிறுமியர் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். ஆசிரியர்கள் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுக்கின்றனர். அழிவு சக்தி எப்போது ஆட்சிக்கு வந்ததோ அன்றே நீதி போதனை வகுப்பு அகற்றப்பட்டு விட்டது. பள்ளியில் ஒழுக்கத்தை போதிக்க வேண்டும். அப்போது தான், அடுத்த தலைமுறையாவது ஒழுக்கத்துடன் இருப்பர். தி.மு.க., ஆட்சியில் இருந்தால், இதுபோன்று தான் நடக்கும்.
டவுட் தனபாலு: நியாயமான பேச்சு தான் என்றாலும், சமீபத்தில் உங்க கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற மஹாராஷ்டிராவில், பஸ் ஸ்டாண்டிலேயே ஒரு பெண்ணை, ஒரு நபர் சீரழிச்ச கதைக்கு எந்த சால்ஜாப்பும் சொல்ல முடியாதே... 'நிர்பயா' கொடூரம் போன்றது அதுன்னு எல்லாரும் விளக்கி சொல்றாங்க. இது, உங்களுக்குத் தெரியுமாங்கிறது, 'டவுட்' தான்!
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்: 'ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனம்' என்று கிராமங்களில், மைனர்கள் சுற்றித் திரிவதுபோல், விதிவசத்தால் முதல்வரான ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளில் மார்தட்டி அலைகிறார். மருத்துவத் துறையில், தமிழகம் முன்னோடியாக இருப்பதற்கு, கருணாநிதியே காரணம் எனக் கூறி, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சித்துஉள்ளார்.
டவுட் தனபாலு: தி.மு.க., வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தலைமைச் செயலகத்தை நடத்துவதற்காக, பல நுாறு கோடி மக்கள் வரிப் பணத்தைச் செலவு செய்து கட்டிய ஓமந்துாரார் மாளிகையில் காலடி வைக்க மாட்டேன் என, உங்க தலைவி ஜெயலலிதா பிடிவாதம் பிடித்து, அந்த கட்டடத்தை மருத்துவமனையா மாத்தினாங்களே... அதைவிட இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லைங்கிறதுல, உங்களுக்கு கூட ஒரு, 'டவுட்'டும் இருக்கக் கூடாது!
நடிகர் சரத்குமார்: தி.மு.க.,வில், வேறு யாரும் தலைமை பொறுப்புக்கு வர முடியாது. அங்கு எவ்வளவு உழைத்தாலும், வெளியாள் யாரும் மேல் நிலைக்கு வர முடியாது. ஒரு சாதாரண காரியகர்த்தா, நாட்டின் பிரதமராக வர முடியும் என்ற ஒரே கட்சி, பா.ஜ., தான் என்பதை மறந்து விடக்கூடாது. அதுதான் உண்மையான ஜனநாயகம். அந்த இயக்கத்துடன் எங்களை இணைத்துக் கொண்டதை நினைத்து பெருமைப்படுகிறேன்.
டவுட் தனபாலு: இப்போதே துண்டு போட்டா தான், சட்டசபை தேர்தலில் போட்டியிட, தொகுதி கிடைக்கும்ங்கிறதுல, நீங்க குறியா இருக்கீங்கன்னு, 'டவுட்'டே இல்லாம புரியுது!