PUBLISHED ON : மார் 05, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: அ.தி.மு.க.,வை யாரும் பலவீனப்படுத்த முடியாது. கட்சியை விட்டு வெளியே சென்றவர்கள், வேறு கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டவர்கள் அ.தி.மு.க.,வை சொந்தம் கொண்டாட முடியாது. இதை, அ.தி.மு.க., தொண்டர்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். கட்சியை விட்டு வெளியே சென்றவர்கள், மீண்டும் சேர வேண்டுமென்றால், அ.தி.மு.க., பொதுச்செயலரிடம் கடிதம் கொடுத்து, அவர் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்வார்.
டவுட் தனபாலு: மூன்று நாட்களாக, சம்பந்தப்பட்ட பொதுச்செயலர் பேச்சில் சில மாற்றங்கள் தென்படுகிறதே... நீங்கள் பாட்டுக்கு எக்குத்தப்பாக வார்த்தைகளை விட்டு, உங்களால்தான் யாரும் ஒருங்கிணைய முடியவில்லை எனக்கூறி உங்களை ஓரங்கட்டி வச்சிடப் போறாங்க. நீங்க சூதானமா பேசணும்ங்கிறதுல, 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., தலைவர் அன்புமணி: சென்னை கொளத்துாரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பெரியார் அரசு மருத்துவமனையில், ஒரு டாக்டர் கூட புதிதாக நியமிக்கப்படவில்லை. மாதம், 60,000 ரூபாய் ஊதியத்தில் 35 டாக்டர்கள், 18,000 ரூபாய் ஊதியத்தில், 156 செவிலியர்கள் உள்ளிட்ட 266 மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த சமூக அநீதி அதிர்ச்சி அளிக்கிறது.
டவுட் தனபாலு: இப்படியாவது டாக்டர்களை நியமிச்சிருக்காங்களே... டாக்டர்களே இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்? போலி டாக்டர்களை ஒழிக்க, இந்த முயற்சியாவது எடுக்கப்படுகிறதே என்று, 'டவுட்' இல்லாமல் சந்தோஷப்படலாமே!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா: பாரம்பரிய இடங்களில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதுடன், அவர்களது படகுகளை பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கி வருகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும் 42 மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான எட்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
டவுட் தனபாலு: பிச்சை எடுக்கும் போராட்டத்தில் கலந்துகொண்ட மீனவர்களை, கவர்னர்ரவி நேரில் சந்தித்து ஆறுதல் அளித்து, அவர்களின் துயர் துடைக்க நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறி இருக்கிறார்; முதல்வர் ஸ்டாலினும், பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளார். காத்திருந்து பார்ப்போம்; 'டவுட்' தெளிந்து விடும்!