
அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் கே.பி.முனுசாமி: தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர், வடக்கில் மட்டும் இருந்த பா.ஜ.,வை தமிழகத்திற்கு அழைத்து வந்தார். கடந்த, 1998 லோக்சபா தேர்தலில், வாஜ்பாய், அத்வானி யுடன் இணைந்து, தேசியம் எனும் வார்த்தைக்கான கூட்டணியை உருவாக்கினார். இந்த வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்.
டவுட் தனபாலு: வாஜ்பாயுடன் கூட்டணி அமைத்தாலும், 2014 லோக்சபா தேர்தலில், 'மோடியா, இந்த லேடியா'ன்னு சவால் விட்டு, ஜெயலலிதா தேர்தல் களத்தில் சாதித்தார்... இப்ப பா.ஜ.,வை கழற்றி விட்டுள்ள பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வும் அப்படி சாதிக்கும் என, எந்த 'டவுட்'டுக்கும் இடம் தராமல் இவரால் உறுதியா சொல்ல முடியுமா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கருப்பணன்: கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வை விட, 1.50 லட்சம் ஓட்டுகள் மட்டுமே தி.மு.க., அதிகம் பெற்றது. அதை நாம் பெற்றிருந்தால் ஆட்சியில் இருந்திருப்போம். பன்னீர் என்ற நாக பாம்பால் தோற்றோம். அந்த பாம்புக்கு ஆண்டவனே தண்டனை கொடுத்து, அரசியலில் செல்லா காசாக்கி விட்டான். ஆண்டவன் தந்த தண்டனையை பன்னீர் அனுபவித்து தான் ஆக வேண்டும்.
டவுட் தனபாலு: இப்படி பழைய தேர்தல் கதையை பேசி, முடிஞ்சி போன கல்யாணத்துக்கு மேளம் அடிக்கறதையும், பன்னீரை உசுப்பேத்துறதையும் விட்டுட்டு, கூட்டணிக்கு கட்சிகளை பிடிச்சி, தேர்தல் பணியில் கவனம் செலுத்தினாலாவது, லோக்சபாவுக்கு உங்க கட்சியில் இருந்து ஒன்றிரண்டு எம்.பி.,க் களை அனுப்பலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: கடந்த 2019 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு, புதுச்சேரி உட்பட, 10 தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கியது. இம்முறை அந்த எண்ணிக்கையை குறைக்க தி.மு.க., திட்டமிடுகிறது. அதனால் பழைய எண்ணிக்கையை தக்க வைக்கும் எண்ணத்துடன் தி.மு.க.,விடம் பேச, தமிழக காங்கிரஸ் தயாராகி வருகிறது.
டவுட் தனபாலு: என்ன தான் ரூம் போட்டு பேசி, பரிட்சைக்கு தயாராகுற மாதிரி காங்கிரஸ்காரங்க ரெடியானாலும், தி.மு.க.,விடம் நினைத்த தொகுதிகளை வாங்கணும்னா காங்., தொகுதி பங்கீடு குழு செருப்பு தேய அறிவாலயத்துக்கு நடையாய் நடக்கணும் என்பதில் 'டவுட்'டே இல்லை!