PUBLISHED ON : டிச 09, 2024 12:00 AM

பா.ம.க., கவுரவ தலைவர், ஜி.கே.மணி: அம்பேத்கர், அனைவருக்கும் பொதுவான தலைவர். அவரை அனைத்து கட்சி தலைவர்களும் கொண்டாட வேண்டும். அவரின் சிலை, பல இடங்களில் இரும்பு கூண்டுக்குள் வைக்கப்பட்டிருப்பது, மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவரது சிலை மட்டு மின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களின் சிலைகளும் இரும்பு கூண்டுக்குள் அடைக்கப்பட்டு உள்ளன. அவற்றை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டவுட் தனபாலு: குறிப்பிட்ட ஜாதிகளுக்கு என்று கட்சி நடத்தும் சில தலைவர்களால தான், இந்த அவலம்... சுதந்திரத்துக்காக போராடி ஜெயிலுக்கு போன தலைவர்கள், இன்றும் இரும்பு கம்பிகளுக்கு பின் நிற்பது, வேதனைக்குரிய விஷயம் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!
த.மா.கா., தலைவர், ஜி.கே.வாசன்: தமிழகத்தில் சோழன், கம்பன், பொதிகை உள்ளிட்ட தமிழ் பெயர்களில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது, 'வந்தே பாரத், தேஜஸ்' என மாற்றுமொழி பெயர் வைப்பதாக சிலர் விமர்சிக்கின்றனர். தமிழ் பெயர்களில் இயக்கப்படும் ரயில்களின் பெயர்களை மாற்றினால் எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆனால், ரயில்களுக்கு புதிதாக தேசிய அளவில் பெயர் சூட்டுவதை எதிர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. எதற்கெடுத்தாலும், மத்திய அரசை குறை சொல்வதை தவிர்த்து, ஆக்கப்பூர்வமான பிரச்னைகளை பேச வேண்டும்.
டவுட் தனபாலு: மத்திய அரசின் சிறப்பான செயல்பாடுகளால, ஆக்கப்பூர்வமான பிரச்னைகள் கிடைக்காமல் தான், இதுபோன்ற அற்பமான விஷயங்களை ஊதி பெரிசாக்குறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: 'பெஞ்சல்' புயல் பாதிப்புக்கு, அண்டை மாநிலமான புதுச்சேரியில், ஒரு ரேஷன் கார்டுக்கு, தலா, 5,000 ரூபாய் நிவாரண தொகை அறிவித்திருக்கும் நிலையில், தமிழக மக்களிடமும் அந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது அறிவித்துள்ள, 2,000 ரூபாய் போதாது என்பதால், தமிழக முதல்வர் இந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: 'புதுச்சேரி போலவே, தமிழகத்திலும் நிவாரண தொகையை உயர்த்தி தர வேண்டும்' என, உரக்க குரல் கொடுக்காமல், 'கனிவுடன் பரிசீலிக்கணும்'னு ஏன் இவ்வளவு பணிவு... வி.சி., கட்சியின் பெயரில் மட்டும் தான் சிறுத்தைகள் இருக்கு... செயல்பாட்டில் இல்லை என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!