PUBLISHED ON : டிச 28, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: தமிழகத்தில், டங்ஸ்டன் உள்ளிட்ட முக்கிய கனிமங்களை ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசிடம் தான் இருந்தது. ஆனாலும், மத்திய அரசு ஒப்பந்தம் கோருவதற்கு இடைப்பட்ட 10 மாதங்கள் தி.மு.க., என்ன செய்தது என்பதை, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சட்டசபையில் விரிவாக பேசி, தி.மு.க.,வின் கபட நாடகத்தை தோலுரித்து காட்டினார். அதற்கு முதல்வர் ஸ்டாலின், 'வளவள கொழகொழ' என பதில் அளித்து சமாளித்தாரே தவிர, உரிய விளக்கத்தை கொடுக்கவில்லை.
டவுட் தனபாலு: அதான், டங்ஸ்டன் விவகாரத்தை தள்ளி வைக்கிறதா மத்திய அரசு அறிவிச்சிடுச்சே... அதனால, பழைய பிரச்னையை விட்டுட்டு, இந்த வெற்றிக்கு யார் காரணம் என்ற யுத்தத்தை ஆரம்பித்தால், தமிழக மக்களுக்கு பொழுதுபோகும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: 'தி.மு.க.,வின் அழுத்தத்துக்கு பணிந்து, அம்பேத்கர் நுால் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதை, திருமாவளவன் தவிர்க்கிறார்' என்கின்றனர். 'வி.சி.,க்கு வேறு வாய்ப்பில்லை என்பதால், தி.மு.க., அழுத்தம் கொடுத்து அதற்கு திருமாவளவன் அஞ்சுகிறார்' என்று சொன்னால் கூட நியாயம் இருக்கிறது. ஆனால், அரசியல் களத்தில் வேறு வாய்ப்பு இருக்கும் சூழலில், அது தேவையில்லை என எடுத்த முடிவு, எத்தகைய துணிச்சல் வாய்ந்தது என்பதை சொல்ல யாரும் தயாராக இல்லை.
டவுட் தனபாலு: 'வேற போக்கிடம் இல்லாம, நாங்க ஒண்ணும் தி.மு.க., கூட்டணியில் இருக்கலை... எங்களுக்கு வேறு வாய்ப்புகள் வந்தும், போகாமல் அமைதி காக்கிறோம்... அதை மனசுல வச்சுக்கிட்டு, 'சீட்' ஒதுக்கீட்டின் போதும் தி.மு.க., நடந்துக்கணும்'னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
உயர்கல்வி துறை அமைச்சர் செழியன்: அண்ணா பல்கலை மாணவி பலாத்கார சம்பவத்தில்,கைது செய்யப்பட்டவர் தி.மு.க., பிரமுகர் என கூறுவது தவறான செய்தி. எது நடந்தாலும் குறை சொல்ல வேண்டும் என்பது பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையின் பிறவி குணம். மூன்று மாதம் அமைதியாக இருந்த தமிழகத்தில், மீண்டும்தன் குணத்தை அண்ணாமலை காட்டி வருகிறார்.
டவுட் தனபாலு: அது சரி... 'லண்டனுக்கு மூணு மாசம் அரசியல் படிக்க போனவர், மூணு வருஷமா போயிருக்க கூடாதா... 2026 சட்டசபை தேர்தல்ல, தி.மு.க., ஆட்சி முடிவுக்கு வந்த பின் அவர் ஊர் திரும்பியிருந்தால், நிம்மதியா இருக்குமே'ன்னு நினைக்கிறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

