PUBLISHED ON : டிச 30, 2024 12:00 AM

தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ்: 'உன் எதிரிக்கு தரும், தலைகுனிய வைக்கும் தலையாய தண்டனை, உன்னையே நீ வருத்திக் கொள்வது' என்றார் மஹாத்மா. அந்த அஹிம்சையை கையில் ஏந்தி, மக்களை இம்சிக்கும், தி.மு.க., ஆட்சிக்கு விடைகொடுக்க, கையில் சவுக்கையும், காலை விட்டு செருப்பையும் கழற்றி எடுத்துள்ள அண்ணாமலை, மக்கள் விருப்பத்தை நிறைவேற்றி, திறமையற்ற, தி.மு.க., ஆட்சியை சூரசம்ஹாரம் செய்ய வாழ்த்துவோம்.
டவுட் தனபாலு: தமிழக, பா.ஜ.,வினர் கூட, அண்ணாமலையை, மஹாத்மா காந்தியுடன் ஒப்பிட்டு பேசியது இல்லை... தே.ஜ., கூட்டணியில், உங்க தலைவர் பன்னீர்செல்வத்தை சேர்த்ததற்கு இதை விட சிறப்பா நன்றிக்கடனை காட்டவே முடியாது என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி: தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'தி.மு.க., ஆட்சியை அகற்றும் வரை செருப்பு, 'ஷூ' அணிய மாட்டேன்' என கூறியுள்ளார். இனிமேல் தன்னால் எக்காலத்திலும், ஷூ அணிய முடியாது என்பதை மறைமுகமாக தெரிவிக்கவே அப்படி சொல்லியிருக்கிறார்.
டவுட் தனபாலு: 'தி.மு.க., ஆட்சியை அகற்றுவோம்'னு சபதம் போட்டு, சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த, எம்.ஜி.ஆரும், ஜெ.,யும் அதை நிறைவேற்றி காட்டிய வரலாறுகளை மறந்துட்டீங்களா... அந்த வரிசையில் அண்ணாமலையும் சேர்ந்துடாம இருக்க, 2026 சட்ட சபை தேர்தலில் நீங்க ரொம்பவே போராடணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: சென்னை அண்ணா பல்கலை மாணவி மீதான பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், கூட்டணி கட்சிகளான நாங்கள் அமைதி காப்பதாக சொல்வது சரியல்ல. அப்படியெல்லாம் யாரும் இருக்கவில்லை. தவறுகள் நடந்தால், தமிழக அரசுக்கு சுட்டி காட்டுகிறோம். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்கிறோம்; போராட வேண்டிய நேரத்தில் போராடுகிறோம்.
டவுட் தனபாலு: மாணவி விவகாரம், தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்குது... பா.ஜ., ஆளும் மாநிலங்களில் இந்த சம்பவம் நடந்திருந்தால், சிறுத்தை மாதிரி சீறியிருப்பீங்க... ஆளுங்கட்சி கூட்டணியில் இருப்பதால், அடக்கி வாசிக்கிறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!

