PUBLISHED ON : ஜன 20, 2025 12:00 AM

த.வெ.க., தலைவர் நடிகர் விஜய்: அளவற்ற வறுமையை தாண்டினார், எம்.ஜி.ஆர்., 'கூத்தாடி' என்ற கூற்றை சுக்குநுாறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார்; அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார்; அவரே, தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், எம்.ஜி.ஆருக்கு பிறந்த நாள் வணக்கம்.
டவுட் தனபாலு: நீங்க சொல்ற இந்த சாதனைகளை எல்லாம், எம்.ஜி.ஆர்., 'ஓவர்நைட்'ல செய்யலை... படிப்படியாக வளர்ந்து, ரொம்பவும் சிரமப்பட்டு தான், அசைக்க முடியாத சக்தியாக மாறினார்... அவரை போலவே அரசியலில் ஜொலிக்க நினைக்கிற நீங்க, எம்.ஜி.ஆர்., உழைப்பின் முதல் படியையாவது தொட்டுருக்கீங்களா என்பது, 'டவுட்' தான்!
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: அ.தி.மு.க., எனும் மாபெரும் இயக்கம் இணைய வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆனால், பழனிசாமி தரப்பினர், இணைய முடியாது என்கின்றனர். உலகிலேயே, பிரிந்த சக்திகள் இணையக்கூடாது என கூறும் ஒரே நபர் பழனிசாமி என்பதை மக்களும், தொண்டர்களும் நன்கு அறிவர். அதையும் மீறி, கட்சி கட்டாயம் இணையும்; பழனிசாமி முகத்தில் கரி பூசப்படும்.
டவுட் தனபாலு: பழனிசாமி முகத்தில் கரி பூசுறீங்களோ இல்லையோ, நீங்க தான் அடிக்கடி, 'பல்பு' வாங்குறீங்க... தமிழக காங்கிரசாருக்கு, 'காமராஜர் ஆட்சி' மாதிரி, 'பிரிந்த சக்திகள் கட்டாயம் இணையும்' என்பது உங்களுக்கு, தணியாத, 'தாரக' மந்திரமாகிடுச்சோ என்ற, 'டவுட்' தான் வருது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி: தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், கொலை, கொள்ளைகள் அதிகம் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆட்சியை அப்புறப்படுத்தியாக வேண்டும்; இல்லை என்றால், தமிழகத்தின் நிலை மோசமாகும். அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைத்து குடும்ப தலைவிக்கும், மாதம், 1,500 ரூபாய் வழங்கப்படும். இதை வாக்குறுதியாக அளிக்கிறோம்.
டவுட் தனபாலு: மற்ற மாநிலங்கள்ல எல்லாம், மகளிர் உரிமைத் தொகை 2,000 - 2,500ன்னு, 'ஜெட்' வேகத்துல போயிட்டிருக்காங்க... நீங்க, 500 மட்டும் ஏத்துவோம்னா ஆதரவு இருக்குமா... அதையும் இப்ப இருக்கிற, தி.மு.க., அரசே தந்துடும் என்பதால, நீங்க இன்னும், 16 அடி பாயணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!