PUBLISHED ON : பிப் 16, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்: அ.தி.மு.க.,வை பொறுத்தவரை சில துரோகிகள் உள்ளனர். அவர்களின் முகத்திரையை விரைவில் கிழித்து காட்டுவோம். அவர்களால் தான், கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தோம். நான் எப்போதும் தொண்டரோடு தொண்டராக, இந்த கழகத்திற்காக பணியாற்றி, கழகத்தை வெற்றி பெறச் செய்ய பாடுபடுவேன்.
டவுட் தனபாலு: எம்.ஜி.ஆர்., - ஜெ.,யின் தீவிர விசுவாசியான இவர், 2026 சட்டசபை தேர்தல்ல அ.தி.மு.க., ஜெயிக்கலைன்னா, கட்சியே காணாம போயிடும் என்பதை உணர்ந்து, 'பொறுத்தது போதும்'னு பொங்கி எழுந்துட்டாரோ...? ஆயினும், இது செங்கோட்டையனின் தனிப்பட்ட ஆதங்கம் அல்ல; ஒட்டுமொத்த தொண்டர்களின் உள்ளக்குமுறல் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: 'அ.தி.மு.க.,வின், 1.50 கோடி தொண்டர்கள் தான், பொதுச் செயலரை தேர்ந்தெடுக்க வேண்டும்' என, கட்சி விதி உள்ளது. அதை மாற்றி, ஒற்றை தலைமையாக்கினார் பழனிசாமி. விளைவு, தேர்தலில் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறார். நான், சசிகலா, தினகரன் என அனைவரும் ஒன்றிணைந்தால், அ.தி.மு.க., 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறலாம். அ.தி.மு.க.,வில் இணைந்து செயல்பட, எனக்கு எந்த நிபந்தனையும் இல்லை.
டவுட் தனபாலு: இப்ப இப்படித்தான் சொல்லுவீங்க... ஆனா, உங்க மூவரையும் மீண்டும் கட்சிக்குள்ள சேர்த்தால், கூடாரத்துக்குள்ள ஒட்டகம் நுழைந்த கதையாகிடும் என்பதால் தான் பழனிசாமி பயப்படுகிறார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: அ.தி.மு.க.,வில் தற்போது நிலவும் பிரச்னைகளுக்கு, மற்ற கட்சிகளை குறை சொல்ல விரும்பவில்லை. ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பிகளுக்குள் நடக்கும் சண்டை தான் இது. குடும்ப சண்டைகள் சரியாவது போல, அ.தி.மு.க.,வில் நிலவும் பிரச்னை களும் சரியாகி விடும்.
டவுட் தனபாலு: அண்ணன், தம்பிகளுக்குள்ள சண்டை நடப்பதும், அப்புறம் சமாதானம் ஆவதும் வழக்கம் தான்... ஆனா, ஜெ., மறைவுக்கு பின், உங்க கட்சியில சண்டைகள் மட்டும் தானே நடந்துட்டே இருக்கு... உங்க தலைவர் எம்.ஜி.ஆர்., படங்களில் கூட இது போன்ற சண்டை காட்சிகள் இருந்திருக்குமா என்பது, 'டவுட்' தான்!

