PUBLISHED ON : டிச 23, 2024 12:00 AM

தமிழக சபாநாயகர் அப்பாவு: கடந்த, 2011 முதல், 2021 வரை, ஒவ்வொரு ஆண்டும் குளிர் கால சட்டசபை கூட்டத்தொடர், இரண்டு நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் காரணமாக, கூட்டம், குறைவான நாட்கள் நடத்தப்பட்டன. வெள்ளம் போன்ற பாதிப்புகள் வரும்போது, அமைச்சர்கள் களத்திற்கு செல்ல வேண்டி இருந்ததால், சட்டசபை கூட்டத்தை அதிக நாட்கள் நடத்த இயலவில்லை.
டவுட் தனபாலு: அ.தி.மு.க., வினர் செய்த தவறுக்காக தானே, அவங்களை எதிர்க்கட்சியாக்கி, தி.மு.க.,வை மக்கள் ஆளுங்கட்சியாக்கி இருக்காங்க... அ.தி.மு.க., செய்த தவறையே ஆளுங்கட்சியினரும் செய்துட்டு, அதுக்கு நீங்களும் வக்காலத்து வாங்குவது சரியா என்ற, 'டவுட்' வருதே!
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, 60,000 டன் துவரம் பருப்பு மற்றும், 6 கோடி லிட்டர் பாமாயில் வழங்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற, ஒன்பது நிறுவனங்களின் பொருட்களும் தரமற்றவை என, ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் வாங்கி வினியோகித்தால், அவை மக்களுக்கு கேடு விளைவிக்கும். இதில், முதல்வர் தனி கவனம் செலுத்தி, தரமில்லாத பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
டவுட் தனபாலு: ரேஷன் பொருட்களை ஏழை, எளிய மக்கள் தான் பயன்படுத்துறாங்க... தரமில்லாத பொருட்களை அவங்களுக்கு கொடுத்து, அவங்க உடல்நிலை பாதிக்கப்படும்னு தெரிஞ்சு தான், 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தை செயல்படுத்துறாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக, பா.ஜ., மூத்த தலைவர், எச்.ராஜா: தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சீரழிந்து விட்டது. மாணவர்கள் ஆயுதங்களுடன் பள்ளிக்கு செல்கின்றனர். தி.மு.க., அரசு, சட்ட மேதை அம்பேத்கரை வைத்து நாடகம் நடத்துகிறது. அம்பேத்கர் மீது மரியாதை இருப்பதாக கூறுபவர்கள், எந்த திட்டத்திற்கும் அவர் பெயரை வைக்காதது ஏன்?
டவுட் தனபாலு: தமிழகத்தில் துவங்கப்படும் எல்லா திட்டங்களுக்கும் கருணாநிதி பெயரையே சூட்டுறாங்களே... ஒருவேளை, 'கருணாநிதியை விட அம்பேத்கர் ஒன்றும் பெரிய தலைவர் இல்லை'ன்னு நினைச்சுட்டாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

