PUBLISHED ON : மே 20, 2026 12:34 AM

காங்., கட்சியை சேர்ந்த, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி: புதுச்சேரியில், புதிதாக அமைந்துள்ள என்.ஆர்., காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில், இன்னும் மூன்று அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் பதவியேற்க வேண்டும். இதில், இழுபறி நீடித்து வருகிறது. அமைச்சர் பதவிக்கு, 100 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுகிறது. இதனால் தான் அமைச்சர்கள் பதவியேற்பு தள்ளிப்போகிறது. அமைச்சர்கள் நியமனத்தில் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதை, முதல்வர் ரங்கசாமி விளக்க வேண்டும்.
டவுட் தனபாலு: என்னது... சென்னை மாநகராட்சியில் பாதி அளவு கூட இல்லாத புதுச்சேரி மாநிலத்தில், அமைச்சர் பதவிக்கு, 100 கோடி ரூபாய் பேரம் நடக்குதா...? இவர், ஏற்கனவே அந்த மாநில முதல்வரா இருந்து பல அமைச்சர்களை நியமித்தவர் என்பதால், இந்த அளவுக்கு துல்லியமா கணக்கு சொல்றாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: மன்னார்குடி தொகுதியில் வெற்றி பெற்ற, அ.ம.மு.க.,வின் ஒரே எம்.எல்.ஏ.,வான காமராஜை, முதல்வர் விஜய் அபகரித்துள்ளார். ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என நினைக்கும் வேலுமணி தரப்பினர், அ.தி.மு.க.,வை அழிக்க நினைக்கும் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது, எந்த வகையில் நியாயம்? அ.ம.மு.க., - எம்.எல்.ஏ., மற்றும் அ.தி.மு.க.,வினருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால், சி.பி.ஐ., விசாரணை கேட்போம்.
டவுட் தனபாலு: 'நாங்க, பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் இருக்கோம்... அதனால, எங்க கட்சி எம்.எல்.ஏ., மற்றும் வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தா, சி.பி.ஐ.,யை விட்டு, த.வெ.க., அரசை ஒரு வழி பண்ணிடுவோம்'னு நீங்க மிரட்டுவது, 'டவுட்' இல்லாம தெரியுது!
பத்திரிகை செய்தி: தமிழக சட்டசபை தேர்தலில், 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும், தி.மு.க., தோல்வியடைந்தது; முதல்வராக இருந்த ஸ்டாலினே, சென்னை கொளத்துார் தொகுதியில் தோற்றார். சரிவில் இருந்து தி.மு.க.,வை மீட்க, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, தமிழகம் முழுதும் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
டவுட் தனபாலு: அது சரி... ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவும் இப்படித்தான் நடைபயணம்னு தமிழகத்தை பல முறை சுத்தி சுத்தி வந்தாரு... ஆனா, அவரது கால் செருப்பும், கட்சியும் தேய்ஞ்சது தான் மிச்சம்... சமூக வலைதளங்கள் சதிராடும் காலத்துல, நடைபயணம் எல்லாம் இனி மக்கள் மத்தியில் எடுபடுமா என்பது, 'டவுட்'தான்!
