PUBLISHED ON : அக் 10, 2026 12:00 AM

திருத்தணி: நம் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக, திருத்தணி ரெட்டிக்குளம் சீரமைப்பு பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.
திருத்தணி பெரிய தெரு பகுதியில் ரெட்டிக்குளம் உள்ளது. இக்குளத்தில் தண்ணீர் இருந்தால், கீழ்பஜார் தெரு, ரெட்டிக்குளம், பாரதியார் தெரு, சந்து தெரு உட்பட, பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும்.
இந்நிலையில், ரெட்டிக்குளத்தை முறையாக பராமரிக்காததால், குப்பை கழிவுகள் கொட்டியும், செடிகள் வளர்ந்தும் குளம் மோசமான நிலையில் உள்ளது.
மேலும், குளத்திற்கு நீர்வரத்து வரும் கால்வாயும் துார்ந்துள்ளதால், குளத்திற்கு மழைநீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் குளம் வறண்டு கிடக்கிறது.
இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் நேற்று முன்தினம் முதல், ரெட்டிக்குளத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
மேலும், குளத்தை சுற்றியும் கரையை பலப்படுத்தும் பணிகளும் தொடங்கியுள்ளன. இப்பணிகள், 15 நாட்களில் முடிவடையும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே போல், குளத்திற்கு நீர்வரத்து கால்வாய் வசதி ஏற்படுத்தினால், மழைநீர் வீணாகாமல் குளத்திற்கு வரும் என, அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
