PUBLISHED ON : நவ 25, 2024 12:00 AM

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: சில மாதங்களாக, தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு முறையாக வழங்கப்படாததால், கடந்த ஜூன் மாதத்தில், 180 ரூபாயாக இருந்த, 1 கிலோ துவரம் பருப்பின் விலை, 210 ரூபாயாக தற்போது உயர்ந்துள்ளது. வெளி மார்க்கெட்டில் பருப்பு விலை உயர்வதற்காக, அரசு திட்டமிட்டு, ரேஷன் கடைகளில் பருப்பு வழங்காமல் தாமதப்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. -
டவுட் தனபாலு: வெளி மார்க்கெட்டில் பருப்பு விலை உயர, அரசு துணை போகுதா, இல்லையான்னு தெரியலை... ஆனா, வெளி மார்க்கெட்டிலேயே, 210 ரூபாய்க்கு பருப்பு விற்குதுன்னு சொல்லி, ரேஷன்ல, 30 ரூபாய்க்கு தர்ற பருப்பின் விலையை ஏத்திடுவாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
பீஹாரில் செயல்படும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ்: 'தொழில் திட்டங்களுக்கு அரசின் ஒப்புதலை பெறவும், நிதி திரட்டவும் மத்திய அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தொழிலதிபர் அதானி லஞ்சம் கொடுத்ததாக, அமெரிக்கா வழக்கு பதிந்துள்ளது. அவரை உடனே கைது செய்ய வேண்டும்' என, ராகுல் கூறியுள்ளார். அவர் சொல்வது சரி தான்; அதானியை உடனே கைது செய்யுங்கள்.
டவுட் தனபாலு: முன்னொரு காலத்தில், காங்கிரசை எதிர்த்து அரசியல் பண்ணிய நீங்க, இப்ப அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலராகவே மாறிட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது... ராகுல் எதை சொன்னாலும், அதற்கு, 'ஆமாஞ்சாமி' போடுறதுக்கு பதிலாக, உங்க கட்சியை காங்கிரஸ்லயே இணைச்சுட்டா என்ன என்ற, 'டவுட்'டும் கூடவே வருது!
அ.தி.மு.க., பொருளாளர் சீனிவாசன்: கடந்த லோக்சபா தேர்தலில், கூட்டணி கட்சிகளான இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், தலா, 25 கோடி ரூபாய், கொங்கு நாடு முன்னேற்ற கழகத்திற்கு, 15 கோடி ரூபாய் என, மொத்தம், 40 கோடி ரூபாயை, முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்; அதற்கான ஆதாரம் உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு பணம் கொடுத்தது ஸ்டாலின் தான்.
டவுட் தனபாலு: அது சரி... அப்படி கோடி கோடியாக கொட்டி கொடுத்திருப்பதால் தான், ஆட்சிக்கு எதிராக கூட்டணி கட்சியினர் மூச்சு கூட விட மாட்டேங்கிறாங்க... நீங்க, கூட்டணிக்கு வரும்போதே, 'பணம் கேட்க கூடாது'ன்னு கறார் காட்டினால், கடைசி வரை தனிமரமா தான் நிற்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!