PUBLISHED ON : ஜன 13, 2025 12:00 AM

தே.மு.தி.க., பொதுசெயலர் பிரேமலதா: 'பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு, அதிகபட்ச தண்டனையாக துாக்கு தண்டனை அளிக்கப்படும்' என, முதல்வர் அறிவித்துள்ளார். முதல் வழக்காக, பாலியல் வன்முறையில் ஈடுபட்ட, தி.மு.க., அனுதாபி ஞானசேகரனுக்கு, முதல்வர் அறிவித்தது போல துாக்கு தண்டனை அளிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... பாலியல் குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை விதித்து, அதை சட்டுபுட்டுன்னு நிறைவேற்றவும் செய்தால், பாலியல் குற்றங்கள் அதிரடியா குறைஞ்சிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்: கோவை, உடையாம்பாளையம், மாரியம்மன் கோவில் அருகே, மாட்டிறைச்சி பிரியாணி கடை வைக்கப்பட்டுள்ளது. கோவில் புனிதம் கருதி அதை அகற்றிக் கொள்ள, ஊர் பிரமுகர் சுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், பிரியாணி கடை உரிமையாளர் புகாரின்படி, சுப்பிரமணியம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரியாணி கடையை அகற்றுவதுடன், சுப்ரமணியம் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும்.
டவுட் தனபாலு: அது சரி... கோவில் பக்கத்துல பிரியாணி கடை நடத்தியது குற்றமில்லையாம்... அதை அகற்ற சொன்னது குற்றமாகிடுச்சா... பிரியாணி கடைக்கு வேலை மெனக்கெட்டு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தாலும் கொடுப்பாங்களே தவிர, சுப்பிரமணியம் மீதான வழக்கை வாபஸ் வாங்க மாட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: கருணாநிதி, ஜெ., மறைவுக்கு பின், தமிழகத்தை கைப்பற்றி விடலாம் என கனவு கண்டவர்கள், அக்கனவு நிறைவேறாததால், திராவிட கட்சிகளுள் ஒன்றான, அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்தி, தங்களை இரண்டாவது கட்சியாக நிலைநாட்ட முயற்சிக்கின்றனர். மேலும், ஆளும், தி.மு.க., கூட்டணியை, 2026ல் வீழ்த்த வேண்டும் என்ற வெறியுடன் செயல்படுகின்றனர். இவர்களை அடையாளம் கண்டு, 'பாசிச' அரசியல் சதியை முறியடிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: 'அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்த பார்க்கிறாங்க... அதனால, அந்த கூட்டணியில சேர்ந்து, அவங்க கரங்களை பலப்படுத்த போறோம்'னு சொல்றதுக்கு இப்பவே முன்னுரை எழுதுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!