PUBLISHED ON : அக் 12, 2026 12:00 AM

த.மா.கா., தலைவர் வாசன்: தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக டில்லியில் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களும், எம்.பி.,க்களும் ஜனநாயக முறைப்படி போராடினர். அவர்களை போலீசார் கைது செய்த நடைமுறை கண்டனத்துக்குரியது. ராகுல், பிரியங்கா மீது டில்லி போலீசார் வழக்கு பதிந்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததும் முறையற்றது.
டவுட் தனபாலு: இதுக்கு முன்னாடியும் பல பிரச்னைகளுக்காக ராகுலும், பிரியங்காவும் டில்லியில போராட்டம் நடத்தியிருக்காங்க... அப்ப, பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் இருந்த நீங்க, அதை கண்டுக்காம கமுக்கமா இருந்துட்டு, இப்ப தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகியதும், ராகுலுக்கு வக்காலத்து வாங்குறது சரியா என்ற, ‘டவுட்’டும் வருதே!
lll
பத்திரிகை செய்தி: திருப்பூர் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக, இந்திய கம்யூ., கட்சியைச் சேர்ந்த சுப்பராயன் உள்ளார். இவரது மகன் பாரதி, சென்னையில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இது, கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
டவுட் தனபாலு: சுப்பராயனே, தி.மு.க.,வுக்கு ஆதரவாகவும், த.வெ.க., அரசை விமர்சனம் பண்ணிட்டும் தானே இருக்காரு... அவர் எம்.பி.,யாக இருப்பதால், தி.மு.க.,வில் அதிகாரப்பூர்வமா சேர முடியாம, மகனை முதல்ல அனுப்பி வச்சிருக்காரோ என்ற, ‘டவுட்’ தான் வருது!
lll
தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா: என்னுடைய விருத்தாசலம் தொகுதிக்கு எம்.எல்.ஏ., நிதி இன்னும் வரவில்லை. ஒரு திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தினால், அது மக்களிடம் எப்படி போய் சேர்கிறது என்பதை கவனிக்க வேண்டும். ஏற்கனவே, போக்குவரத்து மற்றும் மின்சார துறைகள் கடனில் உள்ளன. ஒவ்வொரு துறையும் கடனில் தான் உள்ளது. இந்த நிலையில், எல்லாவற்றுக்கும் இலவசம் அறிவிப்பது ஏன் என்று புரியவில்லை. பெண்களுக்கான இலவச வெற்றி பஸ் பயணம் திட்டத்தில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன.
டவுட் தனபாலு: மக்களுக்கு மீன் பிடிக்க கற்றுத் தரணுமே தவிர, மீன்களை கையில தரக்கூடாது... அந்த மாதிரி, மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கிறதை விட்டுட்டு, ஓட்டு வங்கி அரசியலுக்காக இலவசங்களை வாரி விடுவது சரியல்ல என்ற வகையில் உங்க கருத்தை, ‘டவுட்’ இல்லாம ஏத்துக்கலாம்!
lll
