PUBLISHED ON : அக் 13, 2026 12:00 AM

வி.சி.க., தலைவர் திருமாவளவன்: த.வெ.க., கூட்டணியில் வி.சி.க.,வின் முக்கியத்துவத்தை சிதைக்க பார்க்கின்றனர். நடந்து முடிந்த இடைத்தேர்தலில், 'யாருக்கும் ஆதரவு இல்லை' என்ற பா.ம.க.,வின் ஓட்டுகள், 100 சதவீதம் த.வெ.க.,வுக்கு வந்ததை போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர். வி.சி.க., இடம்பெற்ற த.வெ.க., அணிக்கு பா.ம.க.,வினர் எப்படி ஓட்டு அளித்திருப்பர்? இரு தொகுதிகளிலும் த.வெ.க., வெற்றிக்கு, வி.சி.க., ஓட்டுகள் உதவியுள்ளன; அதை ஓட்டுச்சாவடி வாரியாக நிரூபிக்க முடியும்.
டவுட் தனபாலு: 'த.வெ.க., கூட்டணிக்குள்ள பா.ம.க., வரும்' என்ற தகவல்கள் உலா வருது... அவங்க உள்ளே வந்துட்டா, நீங்க வெளியேற வேண்டியிருக்கும் என்பதால, 'எங்களால தான் இந்த வெற்றி'ன்னு தம்பட்டம் அடிக்கிறீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!
lll
அ.தி.மு.க., சட்டசபை கொறடா, 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி: கடந்த 2026 சட்டசபை தேர்தலில், த.வெ.க.,வினர் மதுராந்தகத்தில் பெற்ற ஓட்டுகள், 62 ஆயிரம்; தற்போது வாங்கிய ஓட்டுகள், 74 ஆயிரம். பல கூட்டணி கட்சிகளை தங்களோடு இணைத்துக் கொண்டு, கூடுதலாக பெற்ற ஓட்டுகள் வெறும் 12 ஆயிரம் மட்டுமே. ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, கூட்டணி கட்சிகளின் பலத்தை பயன்படுத்தி, பண பலம், படை பலம், அதிகார பலம் போன்றவற்றின் துணையுடன் தான், இந்த கூடுதல் ஓட்டுகளை பெற்றுள்ளனர்.
டவுட் தனபாலு: கடந்த 2026 சட்டசபை தேர்தலில், இந்த தொகுதியில் முதலிடத்துக்கு வந்து வெற்றி பெற்ற உங்க கட்சி, இன்று மூன்றாவது இடத்துக்கு போயிடுச்சே... அது ஏன்னு சுயபரிசோதனை பண்றதை விட்டுட்டு, இப்படி வெட்டிக் கணக்கு பார்த்து காலத்தைக் கடத்தணுமா என்ற, 'டவுட்' தான் எழுது!
lll
பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தில் நீண்ட காலத்துக்கு பின், ஜனநாயக ரீதியில் இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதுவரை நடந்த இடைத்தேர்தல்கள் எல்லாம், எடை தேர்தல்களாகவே இருந்தன. ஆடு, மாடுகள் போல பட்டியில் மக்களை அடைத்து வைத்து, பணம், மது கொடுத்து வென்ற கட்சிகளை பார்த்தோம். இந்த இடைத்தேர்தலில் தான் எதுவும் கொடுக்காமல், ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
டவுட் தனபாலு: இடைத்தேர்தலில் த.வெ.க.,வுக்கு கிடைச்சிருக்கும் வெற்றி, பல கட்சிகளையும் யோசிக்க வச்சிருக்கு... 'இனியும், ஆளுங்கட்சியை எதிர்த்து அரசியல் பண்ணிட்டு இருந்தா, பா.ம.க.,வை வளர்க்க முடியாது... அதனால, ஆளும் கூட்டணியில் ஐக்கியமாகிடலாம்' என்ற முடிவுக்கு வந்துட்டீங்களோ என்ற, 'டவுட்' வருதே!
lll
