PUBLISHED ON : அக் 06, 2026 12:00 AM

சிவகங்கை காங்., – எம்.பி., கார்த்தி: ‘இண்டி’ கூட்டணியில் இருந்து தி.மு.க., வெளியேறியதும், த.வெ.க., உள்ளே வந்துள்ளது. தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற முதல்வர் விஜய் சாலையோர கடையில் தேநீர் குடித்ததையும், டிராக்டர் ஓட்டியதையும் பார்த்தால், பிரசாரத்திற்கு எது தேவையோ, அதை நன்கறிந்து செய்தார் என தெரிகிறது. அவர் பழுத்த அரசியல்வாதியாக மாறியுள்ளார்.
டவுட் தனபாலு: அரசியலுக்கு வந்த பிறகு பொதுமக்களுடன் கலந்து பழகினால் தானே, அவரை தங்களில் ஒருவரா மக்கள் நினைப்பாங்க... ஆனா, உங்க தலைவர் ராகுல் நாடு முழுக்க வலம் வந்தாலும், இன்னும் இளவரசர் மனோபாவத்தில் இருந்து இறங்கி வர மாட்டேங்கிறாரே... விஜயை பார்த்து ராகுல் நிறைய கத்துக்கணும் என்பதில், ‘டவுட்’டே இல்லை!
lll
தி.மு.க., சட்டத்துறை செயலர் என்.ஆர்.இளங்கோ: இடைத்தேர்தல் நடக்கும் தாராபுரம் சட்டசபை தொகுதியில், முதல்வர் விஜய் மற்றும் வேட்பாளரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட டிபன் கேரியர்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுக்கப்பட்டுள்ளன. அதில், ஒவ்வொரு வீட்டிற்கும், 10 ஆயிரம் ரூபாய் வைத்து கொடுக்கப்படுவதாக, தி.மு.க., தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இது குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்துள்ளோம்.
டவுட் தனபாலு: த.வெ.க.,வினர் ஓட்டுக்கு பணம் கொடுத்தாங்களோ, இல்லையோ... ஆனா, தி.மு.க., ஆட்சியில் 2009ல் நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில், பணம் கொடுத்து ஓட்டுகளை வளைக்கும் வித்தையை, உங்க முன்னாள் தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி தான் ஆரம்பிச்சு வச்சாரு என்பது தான், ‘டவுட்’ இல்லாத உண்மை!
lll
த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார்: தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகிய இருவரும் தங்கள் உண்மையான முகத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தி.மு.க.,வுக்கு இனி எல்லா தேர்தல்களிலும் தோல்வி தான். சமுதாயத்தில் இருந்தே விரட்டியடிக்கப்பட வேண்டியவர்கள் தி.மு.க.,வினர். அ.தி.மு.க., தற்போதுள்ள நிலைக்கு விரைவில் தி.மு.க.,வும் வரும்.
டவுட் தனபாலு: இதன் வாயிலாக சமூகத்துக்கு தாங்கள் சொல்ல வரும் கருத்து... ‘ரெண்டு தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க., ஜெயிச்சிட்டா, எம்.எல்.ஏ.,க்களை துாக்கும் வேலையை அடுத்து தி.மு.க.,விலும் ஆரம்பிச்சிடுவோம்’னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, ‘டவுட்’ தான் வருது!
lll
