PUBLISHED ON : நவ 14, 2026 12:00 AM

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி: நடிகர் கமல் 2003ல், சண்டியர் என்ற பெயரில் படம் தயாரிக்க முயன்றபோது, நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தலின்படி தன் படத்தின் பெயரை, விருமாண்டி என கமல் மாற்றினார். தற்போது, மீண்டும் சண்டியர் என்ற பெயரில் படம் தயாரிப்பதாக கமல் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஜாதி மோதல்கள் குறைந்து, நல்லிணக்கம் உருவாகி உள்ளது. தற்போது, சண்டியர் பெயரில் படம் வந்தால், அமைதி சீர்குலைய வாய்ப்புள்ளது. சண்டியர் பெயரில் படத்தை வெளியிட, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.
டவுட் தனபாலு: வேற பெயரில் படம் எடுத்தால், விளம்பர வெளிச்சம் பெருசா கிடைக்காது... சண்டியர்னு வச்சிட்டா, படத்துக்கான விளம்பரத்தை நீங்களே பண்ணிடுவீங்கன்னு நம்பி, இந்த பெயரை கமல் வச்சிருப்பாரோ என்ற, ‘டவுட்’ தான் வருது!
lll
பா.ஜ., தமிழக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்: தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷின் ஜாமின் மனுவை நிராகரித்து, நீதிபதி அளித்த தீர்ப்பில், கட்சி நிதி என்ற பெயரில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். மகேஷ் குடும்பம் ஐந்து தலைமுறைகளாக தி.மு.க., மேலிடத்தோடு நட்புடன் உள்ளது. தி.மு.க., தலைமை பச்சைக்கொடி இல்லாமல், அவர் இதை செய்திருக்க முடியாது.
டவுட் தனபாலு: தி.மு.க., மேலிடத்துடன் ஐந்து தலைமுறைகளாக மகேஷ் குடும்பம் நட்பில் இருப்பது உண்மை தான்... ஆனா, இன்னைக்கு ‘கம்பி’ எண்ணுறது மகேஷ் மட்டும் தானே... அந்த வகையில், ‘மேலிடத்தினர்’ அதிபுத்திசாலிகள் என்பதில், ‘டவுட்’டே இல்லை!
lll
காங்., கட்சியின் சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகி அசோக்குமார்: ‘த.வெ.க., அரசை விமர்சிக்கக்கூடாது’ எனக் கூறும் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு வயதாகி விட்டது. அவர், அரசியலில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும். தவறு செய்தால், அதை கேள்வி கேட்கும் முதல் கட்சியாக காங்கிரஸ் இருக்கும். ‘அமைச்சரவையில் இருப்பதால், த.வெ.க., அரசின் தவறுகளை சுட்டிக்காட்டக்கூடாது’ என, பட்டயம் எழுதிக் கொடுக்கவில்லை.
டவுட் தனபாலு: அது சரி... கடந்த 1978ல் ராஜ்யசபா எம்.பி.,யாகி டில்லிக்கு போன வைகோ, இந்திரா, ராஜிவ், நரசிம்மராவ், வாஜ்பாய்னு பல பிரதமர்களை பார்த்து கேள்வி மேல கேள்வி கேட்டு, அவங்களை திணற அடிச்சாரு... இன்னைக்கு காங்., கட்சியின் ஒரு மாவட்ட நிர்வாகியிடம், ‘பாட்டு’ வாங்குற நிலைக்கு வந்துட்டாரு... ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்ற பழமொழிக்கு சரியான உதாரணம் வைகோ தான் என்பதில், ‘டவுட்’டே இல்லை!
lll
