PUBLISHED ON : நவ 16, 2026 12:00 AM

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்: ‘காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம்’ என, கர்நாடக காங்கிரஸ் அரசின் முதல்வர் சிவகுமார் தொடர்ந்து கூறி வருகிறார். அவர் கூறுவது போல் ஒருபோதும் நடக்காது. அவர் கூறிக்கொண்டே இருக்க வேண்டியது தான். மேகதாது அணை கட்டும் விஷயத்தில், பா.ஜ., தலைவர்கள் ஆதரவாக உள்ளனர் என்றும் அவரே சொல்லிக்கொள்ள வேண்டியது தான். உண்மையில் அப்படி எதுவும் இல்லை.
டவுட் தனபாலு: அதாவது, ‘பா.ஜ., டில்லி மேலிடத்துடன் எங்களுக்கு நெருங்கிய நட்பு இருக்கு... அதனால, காங்., ஆளும் கர்நாடகாவுக்கு சாதகமா எந்த முடிவையும் அவங்க எடுக்கவே மாட்டாங்க’ன்னு சுத்தி வளைத்து சொல்றீங்களோ என்ற, ‘டவுட்’ தான் வருது!
lll
ஜம்மு -– காஷ்மீரில் செயல்படும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா: துப்பாக்கி குண்டுகளோ, ராணுவ மோதல்களோ, அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு காண உதவாது. பகை முடிவுக்கு வரும் வரை காத்திருக்காமல், பாகிஸ்தானுடன் நாம் பேச்சை தொடங்க வேண்டும். பாகிஸ்தானும் பயங்கரவாதத்தை கைவிட்டு, நம் நாட்டுடன் பேச்சு நடத்துவதற்கு ஏதுவான சூழலை உருவாக்க வேண்டும்.
டவுட் தனபாலு: வாஜ்பாய் பிரதமரா இருந்தப்ப, 1999ல் டில்லியில் இருந்து பாகிஸ்தானின் லாகூருக்கு பஸ் விட்டு, அவரே அதுல பயணம் செய்து பாகிஸ்தானுக்கு போய் பேச்சு நடத்தினார்... பதிலுக்கு கார்கிலுக்கு பயங்கரவாதிகளை அனுப்பி வைத்த பாகிஸ்தானுடன், எதை நம்பி பேச்சு நடத்த சொல்றீங்க...? உங்க கருத்தை பார்த்தால், பாகிஸ்தான் துாதராகவே மாறிட்டீங்களோ என்ற, ‘டவுட்’ தான் வருது!
lll
த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார்: த.வெ.க., ஆட்சியில், 19 ஆயிரம் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை பொருட்கள் தொடர்பாக, 9,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 14 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தீபாவளி பண்டிகை வாரத்தில், 40 கொலைகள் மட்டுமே நடந்தன. ஆனால், ‘மீடியா’ வாயிலாக, சட்டம் – ஒழுங்கு குறித்த மோசமான கட்டமைப்பை உருவாக்க தி.மு.க., முயல்கிறது.
டவுட் தனபாலு: அது சரி... இத்தனை ஆயிரம் பேரை கைது பண்ணி சிறையில் தள்ளியும், இத்தனை கொலைகள் நடந்திருக்கு என்றால், இவங்களை எல்லாம் வெளியில விட்டு வச்சிருந்தால், தமிழகத்தின் நிலை என்னவாகி இருக்கும்...? மிச்சம், மீதி இருக்கிறவங்களையும் களை எடுத்தால், ‘டவுட்’டே இல்லாம த.வெ.க., அரசை பாராட்டலாம்!
lll
