PUBLISHED ON : நவ 02, 2026 12:00 AM

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழகத்தில் சட்டம் இருக்கிறது, ஒழுங்கு கிடையாது. தொடர்ந்து கொலைகள் நடக்கின்றன. வெட்டிக் கொலை என்பதை, ‘வெற்றிக் கொலை’ என வைத்துக் கொள்ளலாம். முத்து நகரம் என அழைக்கப்படும் துாத்துக்குடி, தொடர் கொலைகளால் குத்து நகரமாக மாறி விட்டது. தி.மு.க., ஒரு கருமம்; த.வெ.க., கொடிய கருமம். பைத்தியக் கூட்டத்திற்கு நடுவே மாட்டிக்கொண்டு மக்கள் பெரும்பாடு படுகின்றனர்.
டவுட் தனபாலு: தி.மு.க., – த.வெ.க.,வுக்கு மத்தியில் சிக்கி மக்கள் தவிக்கிறதா சொல்றீங்களே... இடையில, அ.தி.மு.க., என்ற ஒரு கட்சி இருப்பதையே மறந்துட்டீங்களே... இதன் மூலமா, ‘இனி தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி நாங்க தான்’னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, ‘டவுட்’ தான் வருது!
lll
விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., செயலர் வெங்கடேசன்: விழுப்புரம் மாவட்டத்தில், நான்கு தொகுதிகளில் தி.மு.க., – தே.மு.தி.க., தோல்விக்கு, தி.மு.க., நிர்வாகிகளே காரணம். தான் அமைச்சராக வேண்டும் என்ற எண்ணத்தில், எந்தெந்த தொகுதியில் தி.மு.க., வேட்பாளர்கள் போட்டியிட்டனரோ, அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், ‘உள்ளடி’ வேலையில் தி.மு.க., நிர்வாகி களே ஈடுபட்டனர். அதனால் தான், தி.மு.க., ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. தி.மு.க.,வினரின் உள்ளடி வேலையால், தே.மு.தி.க.,வும் தோல்வியை தழுவ வேண்டிய நிலை ஏற்பட்டது.
டவுட் தனபாலு: தி.மு.க.,வினரின், ‘உள்ளடி’ வேலையால ஆட்சி போயிருந்தாலும் பரவாயில்லை... பள்ளிக் கல்வித் துறையின் முன்னாள் அமைச்சர் மகேஷ் மாதிரி, இன்னும் பல ‘மாஜி’க்களும் சிறைக்கு போக வேண்டியிருக்குமே... ‘உள்ளடி’ வேலையில் ஈடுபட்ட தி.மு.க.,வினர், இதை எல்லாம் யோசிக்க மறந்துட்டாங்களோ என்ற, ‘டவுட்’ வருதே!
lll
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: இந்தியா ஜனநாயக நாடு; யார் வேண்டுமானாலும் இங்கு அரசியல் கட்சி தொடங்கலாம். விஜய்க்கு எப்படி ஒரு, ‘ஜாக்பாட்’ அடித்ததோ, அதேபோல் நடிகர் தனுஷுக்கும், ‘ஜாக்பாட்’ அடிக்கும் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.
டவுட் தனபாலு: அது சரி... ஓ.பன்னீர்செல்வம் முதல்வரா இருந்தப்ப, அவருக்கு குனிஞ்சு கும்பிடு போட்டுட்டு இருந்த நீங்களும் திடீர்னு, ‘ஜாக்பாட்’ அடிச்சு தானே முதல்வர் பதவிக்கு வந்தீங்க... அந்த வகையில், தனக்கும் ஜாக்பாட் அடிக்கும்னு தனுஷும் நம்புறாரோ என்ற, ‘டவுட்’ தான் வருது!
lll
