PUBLISHED ON : செப் 28, 2024 12:00 AM

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தில், 2018ல் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்பட்டது; அதில், முதல்வரைவிசாரிக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. லோக் ஆயுக்தாவில் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர் இல்லை. கர்நாடகாவை போல், தமிழகத்தில்லோக் ஆயுக்தா வாயிலாக, முதல்வரையும் விசாரணை வளையத்தில் கொண்டு வர வேண்டும்.
டவுட் தனபாலு: கர்நாடகாவுலலோக் ஆயுக்தா வலுவா இருக்கிறதால தான், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், இந்நாள்முதல்வர் சித்தராமையாவும்சிக்கல்களை சந்திச்சாங்க... இங்கயும், அந்த மாதிரி கொண்டுவரச் சொல்றீங்களே... எதிர்காலத்துல, அன்புமணி முதல்வராகிறப்ப, அவருக்கு அது பாதகமா அமையுமே என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?
த.மா.கா., தலைவர் வாசன்: தி.மு.க., அரசு மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வரும் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த, மக்கள் தயாராக உள்ளனர். அதனால், ஆட்சி மாற்றம் என்பது, 100 சதவீதம்உறுதி. வரும் காலம் த.மா.கா.,வுக்குவசந்த காலம். தமிழக வெற்றிக்கழகம் மாநாட்டிற்கு அரசு பயங்கர கட்டுப்பாடு, நெருக்கடி கொடுப்பதை ஏற்க முடியாது; கெடுபிடிகளை மீறி, விஜய் கட்சி வெற்றி பெறும்.
டவுட் தனபாலு: 'விஜய் கட்சி வெற்றி பெறும்; த.மா.கா.,வுக்கு வசந்த காலம்' என்றெல்லாம் சொல்வதை பார்த்தால், 'ஜெயிக்கிற குதிரை மீதுபயணம் செய்வோம்' என்ற முடிவுக்கு வாசன் வந்துட்டாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
கோவை தெற்கு தொகுதி பா.ஜ., -- எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன்: செந்தில் பாலாஜி தமிழக அரசின் முழு ஆதரவை பெற்ற, 'பவர் புல்' முன்னாள் அமைச்சர். மீண்டும் அதேபோன்ற ஒரு முக்கியத்துவம், செல்வாக்குடன் அவர் இருந்தால்,அது சாட்சிகளை பாதிக்கும். முதல்வர் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.'ஊழலுடன் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்' என, முதல்வர் சொல்வதை செயலில் காட்ட வேண்டும்.
டவுட் தனபாலு: அட, 'எதிர்க்கட்சிகள் பண்ற ஊழலுடன் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்' என்ற அர்த்தத்தில்தான், அந்த கருத்தை நீங்க எடுத்துக்கணும்... நீங்க கூடாதுன்னு சொன்னதுக்காகவே, செந்தில் பாலாஜிக்கு சிறப்பான துறைகளை ஒதுக்குவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!