PUBLISHED ON : அக் 12, 2024 12:00 AM

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்: இந்தியாவில் எனக்கு இருக்கும் முக்கியமான நண்பர் பிரதமர் மோடி. அவர் மிகவும் நல்லவர்; அதே சமயம் இந்தியாவை யாராவது அச்சுறுத்தினால், முற்றிலும் பயங்கரமாக அவர் மாறி விடுவார். இந்தியாவை ஒரு நாடு தொடர்ந்து அச்சுறுத்தி வந்தது. அப்போது, அமெரிக்கா சார்பில் உதவுவதாக நான் கூறினேன். அதற்கு மோடி ஆவேசமாக மறுத்து விட்டார். 'பல ஆண்டுகளாக அவர்களை தோற்கடித்து வருகிறோம். இதை நாங்களே சமாளித்துக் கொள்கிறோம்' என உறுதிபடக் கூறி விட்டார்.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... 'பஞ்சாயத்து பண்றேன்'னு சொல்லி, நீங்க போன எந்த நாடாவது உருப்பட்டிருக்கா... நீங்க கால் வச்ச ஈராக், ஆப்கானிஸ்தான் எல்லாம் இப்ப எந்த நிலையில இருக்கு... அதுவும் இல்லாம, எங்க பிரச்னையை தீர்க்கும் வல்லமை எங்களிடமே இருப்பதால், உங்க பெரியண்ணன் நாட்டாமை எல்லாம் வேண்டாம்னு, மோடி சரியான பதிலடிதான் தந்திருக்கார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
உ.பி.,யில் செயல்படும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்: உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதிக்கும், காங்கிரசுக்கும் இடையேயான கூட்டணி தொடர்கிறது; 10 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், ஆறு தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். இதை வைத்து வதந்தி பரப்ப வேண்டாம்.
டவுட் தனபாலு: பரவாயில்லை... நாடு முழுக்க காங்., அடி மேல அடி வாங்கினாலும், தமிழகத்தில் தி.மு.க., மற்றும் உ.பி.,யில் உங்களைப் போன்ற தலைவர்கள் தரும் ஆதரவுதான், அக்கட்சிக்கு இன்னும் ஆக்சிஜனாக இருக்குது என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு: துணை முதல்வர் உதயநிதி டி- - ஷர்ட் அணிவது குறித்து, எதிர்க்கட்சியினர் தனிமனித விமர்சனம் செய்கின்றனர். இது, அரசியல் தரம் தாழ்ந்த பேச்சு. ஆடை என்பது அவரவர் விருப்பத்திற்கு ஏற்றது. தனிமனித சுதந்திரம். அதை விமர்சிப்பது முறையல்ல.
-டவுட் தனபாலு: காங்., - எம்.பி., ராகுல் கூடத்தான், டி - ஷர்ட் அணிந்து நாடு முழுக்க வலம் வர்றாரு... அவரை யாரும் குறை சொல்றாங்களா...? கட்சியின் சின்னம், கொடி பொறித்த டி - ஷர்ட் அணிந்து, அரசு அதிகாரிகளுடன் உதயநிதி ஆலோசனை நடத்துவது தான் இங்க விமர்சனத்துக்கு உள்ளாகுது என்பதில், 'டவுட்'டே இல்லை!

