PUBLISHED ON : நவ 08, 2024 12:00 AM

தமிழக முதல்வர் ஸ்டாலின்: கோவை மாவட்டத்துக்கு அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த, 'கம்பேக்' கொடுத்துஇருக்கிறார் செந்தில் பாலாஜி. அவரது சிறப்பான, வேகமான செயல்பாடுகளை பார்த்து, நடுவில்சில தடைகளை ஏற்படுத்தினர். அத்தடைகளை உடைத்து, மீண்டும்வந்திருக்கிறார். கோவைக்காக, செந்தில் பாலாஜி தொடர்ந்து சிறப்பாக செயல்படுவார்.
டவுட் தனபாலு: அ.தி.மு.க., ஆட்சியில, போக்குவரத்து துறைஅமைச்சராக இருந்து, பலருக்கும்,'வேலை வாங்கித் தர்றேன்'னு சிறப்பாகவும், வேகமாகவும் செயல்பட்டு தான், ஒரு வருஷத்துக்கும் மேலா, 'உள்ள' போயிட்டுவந்திருக்காரு... இனியும், அதே மாதிரி செயல்படுவார் என்பது ஏகப்பட்ட, 'டவுட்'களை கிளப்புதே!
'டாஸ்மாக்' ஊழியர்கள் சங்கத் தின், திருப்பூர் மாவட்டச் செயலர் அன்பு: தாராபுரம் மதுக்கடைகளில், குறிப்பிட்ட தொகையை மாமூலாக தரும்படி, தி.மு.க., நகர செயலர் முருகானந்தம் கேட்டார். சி.ஐ.டி.யு., சார்பில் கூட்டம் நடத்தி, 'கொடுக்க வேண்டாம்' என்று முடிவு செய்தோம். இப்பிரச்னை, நான்கு மாதங்களாக உள்ளது. இதற்கு சி.ஐ.டி.யு., தான் காரணம் என்று நினைத்து, சங்க தலைவர்ஆறுமுகம், துணை செயலர் கனகராஜ் ஆகியோரை எவ்வித முகாந்திரமும் இல்லாமல், தற்போது பணியாற்றி வரும் கடையில் இருந்து வெகுதுாரத்துக்குமாற்றினர். இதுகுறித்து டாஸ்மாக்மாவட்ட மேலாளரிடம் கேட்டபோது, 'இடமாற்ற விஷயமே எனக்கு தெரியாது' என்கிறார்.
டவுட் தனபாலு: இவர் சொல்வதை பார்த்தால், 'டாஸ்மாக்' நிர்வாகத்தையே, ஆளுங்கட்சியினர்தான் நடத்துறாங்க... அதிகாரிகள் எல்லாம், 'டம்மி'தான் என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுதே!
பத்திரிகை செய்தி: நாம் தமிழர்கட்சியை சீமான் துவக்கி, 14 ஆண்டுகள் கடந்த நிலையில்,அவர் பேசிய தமிழ்த்தேசிய அரசியலை எந்த கட்சியும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால், தேர்தல் காலங்களில் திரள்நிதி என்ற பெயரில், அக்கட்சிக்கு நிதியும்குவிந்தது. இந்நிலையில், தமிழ்த்தேசிய அரசியல் கொள்கையை விஜயும் கையில் எடுத்துள்ளதால், நாம் தமிழர்கட்சிக்கு வெளிநாடுவாழ் தமிழர்கள் ஆதரவு மட்டுமின்றி, திரள்நிதியும் குறையும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுவே, விஜய் கட்சி மீதான சீமானின் கோபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.
டவுட் தனபாலு: திராவிட கட்சிகள் எல்லாம், ஆட்சிக்கு வந்தால் தான் சம்பாதிக்கும்னு கேள்விப்பட்டிருக்கோம்... ஆனா ஆட்சி, அதிகாரத்துக்கு வராமலேயேஅரசியல்ல, 'அள்ள' முடியும் என்பதை அண்ணன் கட்சி, 'டவுட்'டேஇல்லாம உணர்த்திடுச்சு!

