PUBLISHED ON : நவ 18, 2024 12:00 AM

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர், ஒரே ஒரு ஏரிக்கு தான், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் அனுப்பப்பட்டது. ஆனால், எங்களின், தி.மு.க., ஆட்சி காலத்தில் தான் எல்லா ஏரிகளுக்கும் தண்ணீர் அனுப்பப்பட்டது. ஆனால், அனைத்தையும் தன் ஆட்சி காலத்தில் தான் செய்தோம் என பழனிசாமி கூறுகிறார். இப்படி தான், தி.மு.க., செய்யும் விஷயங்களுக்கெல்லாம் தனக்கு பாராட்டு தேடிக் கொள்கிறார், பழனிசாமி.
டவுட் தனபாலு: பழனிசாமி ஆட்சியில், சென்னையை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் கட்டிய புது பஸ் நிலையத்தை, நீங்க ஆட்சிக்கு வந்து திறந்துட்டு, அதற்கு கருணாநிதி பெயரையும் சூட்டி, அவரது சிலையையும் அங்க நிறுவியது சரியா என்ற, 'டவுட்' வருதே!
நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்: கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரை, சீமான் கடுமையாக விமர்சித்து பேசுகிறார்; இது, தி.மு.க., தலைமைக்கு பிடிக்கவில்லை. எனவே, எங்களின் கட்சியை மறைமுகமாக உடைக்கும் பணிகள், தி.மு.க.,வைச் சேர்ந்த மாவட்ட அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. எங்கள் கட்சியில் இருந்து விலகும் மொத்த பேரையும் ஒருங்கிணைத்து, போட்டி நாம் தமிழர் கட்சியை துவக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
டவுட் தனபாலு: கட்சிகளை உடைப்பதில் ரெண்டு கழகங்களும் கைதேர்ந்தவை என்பது நாடறிந்த சங்கதியாச்சே... பேசாம, திராவிட கட்சிகள்ல வக்கீல்கள் அணி, தொழிலாளர் அணின்னு பல அணிகள் இருப்பது மாதிரி, கட்சிகள் உடைப்புக்கும் தனியாக ஒரு அணியே ஆரம்பிச்சிடலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக முதல்வர் ஸ்டாலின்: நான் பிரச்னைகளை நேர்கொண்டு நிற்கிறேன். ஒவ்வொரு பிரச்னையையும் தீர்க்கிறேன். மக்களுக்காக பார்த்து, பார்த்து திட்டங்களை தீட்டுகிறேன். அவை எப்படி செயல்படுகின்றன என்பதையும் கள ஆய்வு செய்கிறேன்.
டவுட் தனபாலு: நீங்க, புதுசு புதுசா திட்டங்கள் தீட்டுவது இருக்கட்டும்... ஏற்கனவே அறிவித்த, 'அரசு ஊழியருக்கு பழைய ஓய்வூதியம், மாதம் ஒருமுறை மின் கணக்கீடு, காஸ் சிலிண்டர் விலை குறைப்பு' போன்ற எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்ற முயற்சிகளை எடுத்தால், 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!