PUBLISHED ON : ஜன 01, 2024 12:00 AM

தமிழக தகவல், தொழில்நுட்ப துறை அமைச்சர் தியாகராஜன்: இங்கு, வாக்காளர்கள், பிரதிநிதிகள் விகிதாசாரத்தில், 2 லட்சம் வாக்காளர்கள் அடங்கியது ஒரு, எம்.எல்.ஏ., தொகுதி எனவும், 10 லட்சம் வாக்காளர்கள் அடங்கியது ஒரு, எம்.பி., தொகுதி எனவும் உள்ளதை மாற்ற வேண்டும். சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில், 30,000 பேருக்கு ஒரு மக்கள் பிரதிநிதி என உள்ளது. அதுபோல இங்கும் அமைத்தால், மக்களும் பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு கேள்வி கேட்பர்.
டவுட் தனபாலு: இவர் வேற... மக்கள் தொகையை கட்டுப்படுத்துறதுல சிறப்பா செயல்பட்ட தமிழகத்துக்கு தண்டனையா, இப்ப இருக்கிற, எம்.பி., தொகுதிகளையே குறைக்கலாமான்னு மத்திய அரசு யோசனை பண்ணிட்டு இருக்குது... இதுல, ௩௦,௦௦௦ பேருக்கு ஒரு மக்கள் பிரதிநிதி கதை எல்லாம் இங்கு நடக்குமா என்பது, 'டவுட்'தான்.
பத்திரிகை செய்தி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் அறிவிக்கப்பட்டுள்ள, கோவை - பெங்களூரு, 'வந்தே பாரத்' ரயில், அதிகாலை, 5:00 மணிக்கு கோவையில் கிளம்புவதும், ௩௮௦ கி.மீ.,யை கடக்க ஆறரை மணி நேரம் பயணம் என்பதும், கோவை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
டவுட் தனபாலு: 'பிளைட்'டுக்கு செலவழிக்கிற பணத்துல, கால்வாசியில அதிவேக பயணம் செய்யலாம்னு தானே, வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்தாங்க... இப்படி, பாசஞ்சர் வேகத்துல போற ரயிலுக்கு எல்லாம் வந்தே பாரத்னு பெயர் சூட்டுனா, அதுக்கான மரியாதையே போயிடும்கிறதுல, 'டவுட்'டே இல்லை!
காங்., மூத்த தலைவர் சச்சின் பைலட்: மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், காங்., கட்சியின், 'நாங்கள் தயார்' என்ற பேரணிக்கு மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வரும் லோக்சபா தேர்தலில், 'இண்டியா' கூட்டணி வெற்றியை, இது உறுதி செய்யும்.
டவுட் தனபாலு: நாக்பூர் பேரணிக்கு கிடைச்ச வரவேற்பு, நாடு முழுக்க கிடைக்கும்னு நம்புறீங்களோ... மறுபடியும் மத்தியில ஆட்சி அமைக்க நீங்க தயாரா இருக்கலாம்... ஆனா, உங்களை ஆட்சியில அமர்த்த, நாட்டு மக்கள் தயாரா இருக்காங்களா என்பது, 'டவுட்' தான்.