
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: கருணாநிதியால் தான், எம்.ஜி.ஆர்., சினிமாவில் தொட முடியாத உயரத்துக்கு சென்றதை போல, ரஜினி, கமல் ஆகியோர், கருணாநிதி, 100 விழாவில் உண்மைக்கு மாறாக பேசி உள்ளனர். எம்.ஜி.ஆர்., தன் நடிப்பாலும், உழைப்பாலும், வள்ளல் குணத்தாலும் மட்டுமே, மக்கள் மனங்களை வென்று நிற்கிறார். அவரது உதவியால் தான் கருணாநிதியே முதல்வரானார்.
டவுட் தனபாலு: பொதுவா, பாராட்டு விழாக்கள்ல பேசுறவங்க, சில விஷயங்களை மிகைப்படுத்தி பேசுறது சகஜம் தானே... ஜெ., முதல்வரா இருந்தப்ப, உங்க பிறந்த நாள் விழாவுல பேசியவங்க, 'நாளைய முதல்வரே'ன்னு உங்களை அழைச்சு, அதனால உங்க பதவி பறிபோன வரலாற்றை மறந்துட்டீங்களா என்ற, 'டவுட்'தான் வருது!
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன்: தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை, 1,100 கோடி ரூபாய் மானியத்துடன், 3,891 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டு, 30,981 இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்.
டவுட் தனபாலு: அப்படியா...? அந்த இளைஞர்கள் யார், யார், என்னென்ன தொழில்கள் பண்றாங்க என்பது போன்ற விபரங்களை, உங்க துறையின் இணையதளத்துல வெளியிட்டீங்கன்னா, 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி: அமைச்சர் சுப்பிரமணியன் ஒரு நிகழ்ச்சி நடத்தினால், ஒன்று முதல்வரை வைத்து நடத்துவார்; இல்லையென்றால் என்னை வைத்து நடத்துவார். என்னுடைய விளையாட்டு மேம்பாட்டு துறையும், மக்கள் நல்வாழ்வு துறையும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தது. நான் கருணாநிதி பேரன், எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் டாக்டர்கள், நர்ஸ்களை தான் கடவுளாக பார்க்கிறேன்.
டவுட் தனபாலு: நீங்க, யாரை கடவுளா பார்க்கிறீங்களோ, இல்லையோ... தி.மு.க.,வுல இருக்கிற முன்னணி தலைவர்கள் பலரும், கட்சியிலயும், ஆட்சியிலயும் அந்தஸ்தான இடத்தை பிடிக்கிறதுக்கு, உங்களை தான் கடவுளா நம்புறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

