
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்: என் பெற்றோர் உட்பட குடும்பத்துடன், அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என, விரும்புகிறேன். அதனால், 22ம் தேதி நடக்கவுள்ளகும்பாபிஷேக விழாவுக்கு பின், ராமர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வேன்.
டவுட் தனபாலு: அதென்ன, எல்லா எதிர்க்கட்சி தலைவர்களும் சொல்லி வச்ச மாதிரி, 22ம் தேதிக்கு பிறகு, தனியா ராமர் கோவிலுக்கு போய் வழிபடுவேன்னு கோரஸ் பாடுறீங்க... இதுல, உங்க பக்தி தெரியலை... ஹிந்துக்கள் ஓட்டு பா.ஜ.,வுக்கு போயிட கூடாதுங்கிற பதைபதைப்பு தான் தெரியுது என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., தலைவர் அன்புமணி: லோக்சபா தேர்தலையும், சட்டசபை தேர்தலையும் ஒன்றாக நடத்தினால் தேசிய அளவிலான பிரச்னைகள் தான் முதன்மைப்படுத்தப்படும். இது, தேசிய கட்சிகளுக்கு கூடுதல் வலிமையையும், மாநில கட்சிகளுக்கு பலவீனத்தையும் ஏற்படுத்தும்.
டவுட் தனபாலு: மாநில கட்சிகளுக்கு பலவீனம் ஏற்படுவது, உங்களை போன்ற பிராந்திய கட்சிகளுக்கும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துமே... மாநில கட்சிகளை நம்பிதானே, உங்க அரசியல் வண்டி ஓடுது... இதனால், ஒரே நாடு; ஒரே தேர்தல் உங்களுக்கு கசக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: துணை முதல்வர் பதவி தொடர்பாக தனக்கு அளிக்கப்பட்ட உறுதி மொழியை, தந்தையும், முதல்வருமான ஸ்டாலின் மீறி விட்டார் என்ற காரணத்துக்காக அமைச்சர் உதயநிதி, 'அப்செட்' ஆகி இருப்பதாக தி.மு.க., வட்டாரங்களில்தகவல் பரவியுள்ளது.
டவுட் தனபாலு: அடடா... முதல்வர், வாக்களித்த மக்களுக்கு கொடுத்த உறுதிமொழியை தான் மறந்துட்டார்னு பார்த்தா, பெத்த பிள்ளைக்கு தந்த வாக்கையே மறந்துட்டாரா... இதை பார்த்து, மக்கள் தங்கள் மனதை தேத்திக்க வேண்டியது தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!

