
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: தி.மு.க., - எம்.எல்.ஏ., மகன் வீட்டில், பட்டியலின பெண் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம், மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் செல்வாக்கு உள்ள குடும்பம் என்றாலும், காவல் துறை வழக்கு பதிவு செய்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
டவுட் தனபாலு: தி.மு.க., கூட்டணியில இருக்கீங்க... தேர்தல் வேற வருது... அதனால, வழக்கு பதிவு செஞ்சதுக்கே ஆறுதல் பட்டுக்கிறதை தவிர, உங்களுக்கு வேற வழி எதுவும் இல்லை என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
தமிழக காங்., மேலிட பொறுப்பாளர், அஜோய்குமார்: 'இண்டியா' கூட்டணியின் வலிமையான தலைவராக, முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். தமிழகம்,- புதுச்சேரியில், இண்டியா கூட்டணியை, ஸ்டாலின் வழிநடத்துவார்.
டவுட் தனபாலு: 'வலிமையான தலைவர் ஸ்டாலின்'னு சொல்லிட்டு, அடுத்த வரியிலயே, 'தமிழகம், புதுச்சேரி கூட்டணியை மட்டும் வழி நடத்துவார்'னு சொல்றீங்களே... 'தப்பி தவறி எங்க கூட்டணி ஜெயித்தாலும், துணை பிரதமர் பதவிக்கெல்லாம் ஸ்டாலின் ஆசைப்படக் கூடாது' என்பதை இப்படி நாசுக்கா சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
பா.ஜ.,வை சேர்ந்த, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு: விழுப்புரத்தில் இரண்டு மாணவியரிடம் ஆசிரியரே தவறாக நடந்து கொண்டிருக்கிறார். அது தொடர்பாக வழக்கு பதிவு செய்யாமல் இருந்துள்ளனர். போராட்டத்திற்கு பின், வழக்கு பதிந்தனர். தற்போது, வழக்கை வாபஸ் பெறக் கோரி, மிரட்டி வருகின்றனர். தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அது முதல்வருக்கே நன்கு தெரியும்; அவர் எதற்கும் நடவடிக்கை எடுப்பதில்லை.
டவுட் தனபாலு: 'அ.தி.மு.க., ஆட்சியில இந்த மாதிரி அக்கிரமங்கள் நடந்தப்ப எல்லாம் ஆவேசமா கண்டனம் தெரிவித்த கனிமொழி, இப்ப எங்க இருக்காங்க; தி.மு.க., ஆட்சியில நடக்கிறப்ப மட்டும் அவங்க, 'சைலன்ட் மோடு'க்கு போயிடறது ஏன்?' என்ற, 'டவுட்'தான் வருது!

