PUBLISHED ON : ஜன 25, 2024 12:00 AM

ஜெ.யின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன்: அ.தி.மு.க. உறுப்பினர்கள், தங்களுடைய குடும்ப ஓட்டுகளை, பா.ஜ.வுக்கு செலுத்தப் போகிறோம் என்கின்றனர். கட்சி யின் தீவிர பற்றாளர்கள் கூட, இன்று மனம் மாறிப் போய் இருக்கின்றனர். கடந்த 15 நாட்களுக்குள், பலர் இவ்வாறு பேசத் துவங்கி இருப்பதை பார்க்கிறேன்.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தானே... பிரதமர் வேட்பாளரா யாரையும் அறிவித்து, தேர்தலில் ஓட்டு கேட்க முடியாத அ.தி.மு.க.வை, பொதுமக்கள் தான் ஏத்துக்க மாட்டாங்கன்னு பார்த்தோம்... இப்ப, அந்த கட்சியின் தொண்டர்களே ஏத்துக்க மறுக்கிறாங்க என்றால், லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. கதி அதோ கதியாகிடுமோ என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக காங். தலைவர் அழகிரி: ஜனநாயகத்தில் ஆட்சிக்கு வர, வாக்குறுதிகள், பரிந்துரைகளை தெளிவாக வெளிப்படுத்தும் தேர்தல் அறிக்கை மிக முக்கிய ஆவணம். கடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மகத்தான சாதனைகளை புரிந்தது.
டவுட் தனபாலு: பத்து வருஷத்துக்கு முன்னாடி, உங்க கூட்டணி கொடுத்த வாக்குறுதிகளை பத்தி பெருமை பேசுறீங்களே... மூணு வருஷத்துக்கு முன்னாடி, உங்க கூட்டணி தலைமையான, தி.மு.க. தந்த வாக்குறுதிகள்ல பாதிக்கும் மேல பெண்டிங்குல கிடக்குதே... அது பற்றி, அவங்களிடம் ஒரு வார்த்தை கேட்க மாட்டீங்களா என்ற, 'டவுட்' வருதே!
பா.ஜ. மகளிர் அணி தேசிய செயலர் வானதி சீனிவாசன்: பெண்களின் முன்னேற்றத்தை வைத்து, மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் செய்து வருகிறார். ஆனால், தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் எது என்ற புரிதல் மக்களுக்கு இல்லை. பல இடங்களில், மத்திய அரசின் அதிக நிதி கொடுக்கும் திட்டங்களில் பிரதமர் பெயரோ, மத்திய அரசின் பெயரோ பயன்படுத்தப்படவில்லை. தொடர்ந்து, பிரதமர் பெயர் மறைக்கப்படுகிறது.
டவுட் தனபாலு: மத்திய அரசு தரும் நிதியிலான திட்டங்களில் வேணும்னா, பிரதமர் மோடி பெயரை திராவிட மாடல் ஆட்சியாளர்கள் மறைக்கலாம்... ஆனா, மக்கள் மனங்களில் அழுத்தமாக பதிந்திருக்கும் மோடியை, அவங்களால அகற்றவே முடியாது என்பதில், 'டவுட்'டே இல்லை!