PUBLISHED ON : பிப் 11, 2024 12:00 AM

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு, இந்தியாவின் மிக உயரிய, 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. மூவருமே முழு தகுதி பெற்றவர்கள். இந்தத் தலைவர்களின் உழைப்புக்கும், தொண்டுக்கும் பாரத ரத்னா விருது சிறந்த அங்கீகாரம்.
டவுட் தனபாலு: மேற்குறிப்பிட்ட மூணு பேருமே, பாரத ரத்னா விருதுக்கு முழு தகுதி யுடையவர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை... ஆனாலும், உங்க மகன் அன்புமணி கேட்ட மாதிரி, இதே வரிசையில உங்களுக்கும் பாரத ரத்னா தருவாங்களா என்பது, 'டவுட்' தான்!
உ.பி.,யில் செயல்படும் சமாஜ்வாதி கட்சியின், ராஜ்யசபா எம்.பி., ஜெயா பச்சன்: 'பார்லிமென்டில் ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்கள்' என, என்னிடம் பலரும் கேட்கின்றனர்; அது என் இயல்பு. எனக்கு உடன்படாத விஷயம் நடந்தால், கோபப்படுவேன். என் நடவடிக்கைகள், யாரையாவது காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
டவுட் தனபாலு: நல்லது... எதிர்க்கட்சி வரிசையில் இருப்பதால், ஆவேசமா பேசினா தான், 'ஆக்டிவ்'வா இருக்காங்க என கருதி, அடுத்த முறை தலைமை வாய்ப்பு தரும்னு எதிர்பார்த்து, கோபப்பட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
அ.தி.மு.க., பொதுச் செயலர்பழனிசாமி: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது; குற்றச்செயல் அதிகரித்து விட்டது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. தேர்தலின்போது கொடுத்த எந்த வாக்குறுதியையும் தி.மு.க., நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு; வந்த பின் ஒரு பேச்சு என்பதே, தி.மு.க.,வின் வேலையாகி விட்டது. மக்களும் இதை புரிந்து கொண்டு விட்டனர்.
டவுட் தனபாலு: இதையே, 'பா.ஜ., கூட்டணியில இருக்கும் போது ஒரு பேச்சு; கூட்டணியை விட்டு வெளியில வந்ததும் ஒரு பேச்சு' என, பதிலுக்கு தி.மு.க.,வினர் உங்களை விமர்சனம் செய்தால், உங்களது பதில் என்னவா இருக்கும் என்ற, 'டவுட்' வருதே!

