PUBLISHED ON : பிப் 12, 2024 12:00 AM

தி.மு.க., துணை பொதுச் செயலர் கனிமொழி: முந்தைய லோக்சபா தேர்தலின்போது, தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட சில விஷயங்களை செய்ய முடியாமல் போனதற்கு, மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொண்டது தான் காரணம். ரயில்வே திட்டங்களுக்கு கூட, பா.ஜ., ஆட்சி செய்யாத மாநிலங் களுக்கு, குறிப்பாக, தமிழகத்துக்கு நிதி குறைவாக ஒதுக்கப்படுகிறது. இதனால், சில திட்டங்களை செயல்படுத்த முடியாமல் உள்ளது.
டவுட் தனபாலு: மத்திய அரசு நிதி ஒதுக்காம, சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியலை என்பதை ஏத்துக்கலாம்... ஆனா, சட்டசபை தேர்தலப்ப உங்க கட்சி கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றாம இருப்பதற்கு, யார் மீது பழி போடுவீங்க என்ற, 'டவுட்' வருதே!
பத்திரிகை செய்தி: கரூர் லோக்சபா தொகுதிக்கு வேட்பாளர் கிடைக்காமல், அ.தி.மு.க., திணறி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர், எம்.ஆர்.விஜய பாஸ்கரை போட்டியிடச் சொல்லி, அக்கட்சி தலைமை நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
டவுட் தனபாலு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தப்ப, 39 தொகுதிக்கும் பல ஆயிரம் பேர் விருப்ப மனு கொடுத்துட்டு, 'சீட்' கிடைக்காதான்னு ஏக்கத்தோட காத்துட்டு இருப்பாங்க... இப்ப, உதிரி கட்சிகள் மாதிரி வேட்பாளரை தேட வேண்டிய அளவுக்கு கட்சி தேய்ஞ்சு போயிடுச்சா அல்லது வெற்றி பெறுவோம் என, அந்த கட்சியினருக்கே நம்பிக்கை இல்லையா என்ற, 'டவுட்'தான் வருது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: பா.ஜ., வுக்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் பணியை பன்னீர்செல்வம் செய்து வருகிறார். தேர்தலுக்கு பின், அவர், பா.ஜ.,வில் இணைந்து விடுவார். பா.ஜ., தவிர்த்து, யார் வேண்டுமானாலும் எங்கள் கூட்டணியில் இணையலாம்.
-டவுட் தனபாலு: பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., நாலு வருஷமா ஆட்சியில இருந்தப்ப, பா.ஜ.,வுக்கு விழுந்தடிச்சுட்டு ஆதரவு தந்தீங்களே... அதுக்கு, அவங்க தரப்புல உங்களுக்கு ஏதும் கூலி தந்தாங்களா என்ற, 'டவுட்' வருதே!

