PUBLISHED ON : டிச 11, 2025 07:22 AM

1. பிரமாண்டமான பனிப்பாறைகள், உயிருள்ள உறுப்புகளை போல செயல்படுகின்றன என்கிறது புதிய செயற்கைக்கோள் தரவு. உருகும் நீர் சுழற்சியை பொறுத்து, இந்தப் பனிப்பாறைகள் பருவகாலத்திற்கு ஏற்ப வேகம் கூடி குறைகின்றன. இந்த 'துடிப்பு' ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் மாறுபடுகிறது.
2. துணிகளிலிருந்து வெளியேறும் செயற்கை நுண்ணிழைகள் நீர்நிலைகளையும், உணவுச் சங்கிலியையும் மாசுபடுத்துகின்றன. இதைத் தடுக்க, நெத்திலி மீனின் செவுள் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு புதிய வடிகட்டி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை வாஷிங் மெஷின்களில் பொருத்துவதன் வாயிலாக 99% நுண்ணிழைகளைப் பிடிக்க முடியும்.
3. காற்றில் உள்ள பி.எம்.2.5 அளவுள்ள நுண்துகள்களால் ஏற்படும் நுரையீரல் வீக்கம் மற்றும் செல் சிதைவை, 'வைட்டமின் சி' கணிசமாகக் குறைப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதிக காற்று மாசு நிறைந்த சூழலில் வசிப்பவர்களுக்கு, இந்த எளிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஒரு மலிவான பாதுகாப்புக் கவசமாக அமையக்கூடும்.
4. ரத்தத்தை சோதிக்க, இனி நீரிழிவு நோயாளிகள் தினமும் விரலில் ஊசியால் குத்திக்கொள்ள வேண்டாம். அமெரிக்காவின் எம்.ஐ.டி., விஞ்ஞானிகள், ரத்தத்தை எடுக்காமலே, அகச்சிவப்பு ஒளியைப் பயன்படுத்தி, சர்க்கரை அளவை கண்டறியும் கருவியை உருவாக்கியுள்ளனர்.
5. இண்டக்‑ஷன் வகை அடுப்புகளுக்கு தேவை இனி இருக்காது. உள்ளேயே ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரியை கொண்ட புதிய வகை அடுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது, சாதாரண பிளக் 'பாயின்ட்' களிலேயே இயங்கும். வாடகை வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கும் மின்சார சமையல் எளிதில் சாத்தியமாகும்.

