PUBLISHED ON : பிப் 18, 2024 12:00 AM

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: 'ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கொள்கையை, அ.தி.மு.க., ஆதரிக்கிறது; இது, கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும். இது நடைமுறைக்கு வந்தால், ஜனரஞ்சக திட்டங்களை விட, வளர்ச்சியே மிக முக்கியமாக இருக்கும்' என, கடந்த ஆண்டு செப்டம்பரில், தன், 'எக்ஸ்' பதிவில் பழனி சாமி தெரிவித்திருந்தார். தற்போது இந்த கொள்கையில் இருந்து, 'அந்தர் பல்டி' அடித்திருக்கிறார்.
டவுட் தனபாலு: பா.ஜ., கூட்டணியில் இருந்தப்ப, பழனிசாமி ஆதரித்த திட்டங்களுக்கு, கூட்டணியில் இருந்து விலகியதும், எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பிச்சுட்டாரே... நீங்க சொல்றது சாம்பிள் தான்... அவர் அந்தர் பல்டி அடிச்ச திட்டங்களை பட்டியல் போட்டா, பக்கங்கள் பத்தாது என்பதில், 'டவுட்'டே இல்லை!
காங்., கட்சியை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்: 'இண்டியா' கூட்டணியின் எதிர்காலம் குறித்து என்னால் எதுவும் கூற முடியாது. இண்டியா கூட்டணியின் ஆலோசனை குழுவிலோ, கூட்டங்களிலோ நான் பங்கேற்கவில்லை. ஆனால் ஒன்று, பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வருவது மாநில கட்சிகளுக்கு ஆபத்து.
டவுட் தனபாலு: 'இண்டியா' கூட்டணி கூட்டங்கள்ல, மூத்த தலைவரான உங்களை அழைக்காம புறக்கணிச்ச அதிருப்தியை, இதை விட வெளிப்படையா காட்ட முடியாது என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: அரசியல் கட்சிகளின் தேர்தல் பத்திரங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை எனக்கூறி, உச்ச நீதி மன்ற அமர்வு ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்கது.
டவுட் தனபாலு: அந்த தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியது தான் என்பதில், மாற்று கருத்தில்லை... ஆனா, அதே தேர்தல் பத்திரங்கள் வாயிலா, ஆறு வருஷத்துல, 616 கோடி ரூபாய் நிதியை உங்க தி.மு.க.,வும் வசூல் பண்ணியிருக்கே... இந்த திட்டத்தை எதிர்க்கிற கொள்கையுள்ள நீங்க, அப்படிப்பட்ட நிதி வேண்டாம்னு ஆரம்பத்துலயே மறுக்காதது ஏன் என்ற, 'டவுட்' எழுதே!