PUBLISHED ON : பிப் 20, 2024 12:00 AM

பா.ஜ., மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன்:கர்நாடக முதல்வர் சித்த ராமையா, 'காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட முடிவு செய்துள்ளோம்' என்று அறிவித்துள்ளார். இது சட்டப்படி தவறு. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக காவிரி நீரே உள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் உடனான நெருக்கத்தை, தமிழகத்தின் நலன்களுக்காக பயன்படுத்தி, மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை, முதல்வர் ஸ்டாலின் முறியடிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: மேகதாது அணையை, நினைச்ச உடனே கர்நாடக காங்., அரசால கட்டிட முடியாது... அதுக்கு, மத்திய அரசின் பல துறைகளின் அனுமதி அவசியம்... மத்திய அரசில் உங்களுக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, மேகதாது திட்டத்துக்கு தடை வாங்கி கொடுத்தால், 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!
த.மா.கா., மூத்த நிர்வாகி முனவர் பாட்ஷா: மத்தியில் பிரதமர் மோடி தலைமையில், பா.ஜ., ஆட்சி அமைய வேண்டும். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், பா.ஜ., கூட்டணியில், அ.தி.மு.க., இடம் பெறும் என்று நம்புகிறோம். பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகள் இன்னும் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை. அவர்கள் முடிவு தெரிந்த பின், த.மா.கா., முடிவை வாசன் அறிவிப்பார்.
டவுட் தனபாலு: பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகள் எந்த அணியில் சேருகிறதோ, அது தான் வெற்றி கூட்டணி என வாசன் நினைக்கிறாரா அல்லது கடைசி வரைக்கும், 'சஸ்பென்ஸ்' வச்சா தான் சீட் எண்ணிக்கையை அதிகரிக்கமுடியும் என கணக்கு போடுறாரா என்றெல்லாம் 'டவுட்'கள் எழுதே!
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி: சென்னையில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் நெல்லையிலும் கிடைக்க வேண்டும். அதே வசதிகள், தென்காசியிலும் கிடைக்க வேண்டும் என செயல்படுகிறது, தி.மு.க.,வின் திராவிட மாடல் அரசு.
டவுட் தனபாலு: இதுக்கு முன்னாடி, பலமுறை தமிழகத்தை தி.மு.க., ஆட்சி செய்திருக்கு... அப்பவே, சென்னையில கிடைச்ச வசதி, வாய்ப்புகளை, நெல்லைக்கும், தென்காசிக்கும் கொண்டு போயிருந்தா, அந்த மாவட்ட இளைஞர்கள் வேலை தேடி சென்னைக்கு படையெடுக்காம இருந்திருப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

