PUBLISHED ON : பிப் 26, 2024 12:00 AM

கர்நாடகாவில் செயல்படும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி: பா.ஜ., உடனான கூட்டணியிலோ, தொகுதி பங்கீடு தொடர்பாகவோ, எந்த ஒரு பிரச்னையும் இல்லை. கர்நாடகாவில் உள்ள, 28 லோக்சபா தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் கூட்டணியின் நோக்கம்.
டவுட் தனபாலு: கடந்த, 2023ல் நடந்த சட்டசபை தேர்தல்ல, பா.ஜ.,வுக்கு எதிராக போட்டியிட்டு, அந்த கட்சியை வசை பாடிய நீங்க, ஆறே மாசத்துல அந்த கட்சி கூடவே கூட்டணி போட்டுக்கிட்டீங்களே... காங்., - பா.ஜ., என, அடிக்கடி கூட்டணி மாறும் உங்க முன்னாடி, எங்க ஊர் ராமதாஸ், வைகோ எல்லாம் நிற்கவே முடியாது என்பதில், 'டவுட்'டே இல்லை!
முதல்வர் ஸ்டாலின்: லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். தி.மு.க., ஆட்சியின் திட்டம் பற்றி எளிமையாக பிரசாரம் செய்ய வேண்டும். 'ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, தி.மு.க., அரசு' என, எளிமையாக புரியும் வகையில் பிரசாரம் செய்ய வேண்டும்.
டவுட் தனபாலு: பொதுவா, குடும்ப தலைவர் தான், ஒட்டுமொத்த குடும்பத்தையும் காப்பாற்றும் பொறுப்புல இருக்கார்... அந்த குடும்ப தலைவர், 'டாஸ்மாக்' கடையில குடிச்சிட்டு, தெருவுல விழுந்து கிடந்தா, அந்த குடும்பத்தை யார் காப்பாற்றுவது என்ற, 'டவுட்' வருதே!
தமிழக, காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: மத்திய அரசு மற்றும் இலங்கை அரசின், மீனவர் விரோதப் போக்கை கண்டித்து, நாளை ராமேஸ்வரத்தில், பாம்பன் கடலில் இறங்கி, மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும். மறுநாள், துாத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினத்தில், ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட வரும், பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
டவுட் தனபாலு: உங்க முன்னாள் தலைவர் ராகுலுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து, முன்னாள் மாநில தலைவர் அழகிரி, கும்பகோணத்துல நடத்திய ரயில் மறியல் போராட்டத்துல, அவரது டிரைவரையும் சேர்த்து, நாலே பேர் தான் பங்கேற்றாங்க... நீங்க நடத்தும் போராட்டத்துலயாவது, நிறைய பேர் பங்கேற்பாங்களா என்ற, 'டவுட்' வருதே!

