PUBLISHED ON : பிப் 29, 2024 12:00 AM

தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்: இட ஒதுக்கீட்டை வழங்கி பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் வாழ்வில் ஒளி ஏற்றியவர் கருணாநிதி. ஒடுக்கப்பட்ட மக்கள், உயர் பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில், பல திட்டங்களை செயல்படுத்தினார். அவரது வழியில் தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி நடக்கிறது.
-டவுட் தனபாலு: தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் கருணாநிதி... அவரது வழியில் ஆட்சி நடத்துறவங்களும், அப்படித்தான் இருக்காங்க என்பதை, 'டவுட்' இல்லாம உங்களால சொல்ல முடியுமா?
பத்திரிகை செய்தி: நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் போலியாக, சமூக வலைதள பக்கம் துவங்கப்பட்டு, அதில் ஆபாச வீடியோக்கள் அதிகளவில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இது போலி பக்கம் என்று தெரியாமல், 16,000த்துக்கும் மேற்பட்டவர்கள், அதில் இணைந்துள்ளனர். இது விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-டவுட் தனபாலு: விஜய் கட்சி துவங்கியதை, தமிழகத்தில் பல தலைவர்கள் வாய் வார்த்தைக்கு வரவேற்றாலும், உள்ளுக்குள் உதறல்ல தான் இருக்காங்க... அவரது கட்சியால, யார் அதிகம் பாதிக்கப்படுவாங்களோ, அவங்க தான் இந்த செயல்ல ஈடுபட்டிருப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
காங்., மூத்த தலைவர் கமல்நாத்: நான் பா.ஜ.,வில் இணையப் போவதாக வெளியான தகவல் வதந்தி. ஊடகங்கள் தான் இந்த வதந்தியை திட்டமிட்டு பரப்பின. காங்கிரசில் இருந்து விலகப் போவதாக நான் ஒருபோதும் கூறியது இல்லை.
டவுட் தனபாலு: அப்படியா...? ஆனா, இது பற்றி இரண்டு வாரத்துக்கு முன்னாடி தகவல்கள் கசிந்தப்பவே, நீங்க திட்டவட்டமா மறுப்பு தெரிவிக்காம பூசி தானே மழுப்புனீங்க... இப்ப இப்படி பேசுறதை பார்த்தா, நீங்க கேட்ட பதவியை தர பா.ஜ., மறுத்துடுச்சோ என்ற, 'டவுட்' தான் வருது!

