PUBLISHED ON : மார் 03, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம்: தி.மு.க., முன்னாள் அமைச்சர்பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடந்த ஆண்டு டிச., 21ல், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த எம்.எல்.ஏ., பதவி பறிபோய் விட்டது. ஆனால், அவரது திருக்கோவிலுார் தொகுதி காலியானதாக இன்னும் அறிவிக்கவில்லை. அதை அறிவிக்க வேண்டியது சபாநாயகர் கடமை.
டவுட் தனபாலு: காங்கிரஸ்ல இருந்து பா.ஜ.,வில் சேர்ந்த விஜயதரணி எம்.எல்.ஏ.,வின் ராஜினாமா கடிதத்தை உடனே ஏத்துக்கிட்டு, அந்த தொகுதி காலியா இருப்பதாக சபாநாயகர்அறிவிச்சாரே... பொன்முடி விஷயத்துல மட்டும் மவுனமாக இருப்பது, அவரது நிடுநிலை மீது, 'டவுட்'களை கிளப்பாதா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன்: தமிழகத்தின் ஒட்டுமொத்த பிரச்னைகளை எதிரொலிக்கும் வகையில், எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை இருக்கும்; மத்திய, மாநில அரசுக்கு வழிகாட்டியாகவும் அமையும். அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை, தேர்தலில் பேசுபொருளாக, 'சுப்ரீம் ஹீரோ'வாக இருக்கும்.
டவுட் தனபாலு: தேர்தல் அறிக்கையில, நீங்க ஆயிரம் வாக்குறுதிகளை அள்ளிவிடலாம்... ஆனா, சட்டசபை தேர்தலா இருந்தாலாவது, 'இவங்க ஆட்சிக்கு வந்தா, இதை எல்லாம் நிறைவேற்றுவாங்க'ன்னு மக்கள் நம்புவாங்க... நடக்க போறது, லோக்சபா தேர்தல் என்பதால, உங்க வாக்குறுதிகளை நம்புவாங்களா என்பது, 'டவுட்'தான்!
பத்திரிகை செய்தி: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள, 39 தொகுதிகளிலும், புதுச்சேரி லோக்சபா தொகுதியிலும், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், பிப்., 21 முதல், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம், வரும் 6ம் தேதி மாலை 5:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் விற்பனை நடக்கலையா அல்லது கட்சியினரிடம் இருந்து கால அவகாசத்தை நீட்டிக்கணும்னு கோரிக்கை வந்துச்சான்னு தெரியலையே... என்னதான் கால நீட்டிப்பு தந்தாலும், ஜெ., காலத்துல இருந்த போட்டா போட்டி இப்ப இருக்குமா என்பது, 'டவுட்'தான்!

