PUBLISHED ON : மார் 12, 2024 12:00 AM

அ.தி.மு.க.,வில் இருக்கும் நடிகர் வையாபுரி: அரசியலை பொறுத்தவரை வில்லன்கள் காமெடியனாகவும், காமெடியன்கள், வில்லன் மற்றும் ஹீரோக்களாகவும் ஆகி வருகின்றனர். வாய்ப்பு கிடைத்தால் நானும் ஹீரோவாக நடிப்பேன்.
டவுட் தனபாலு: தி.மு.க., கூட்டணியில் ஒரே ஒரு ராஜ்யசபா சீட், அதையும் தனக்கே தனக்கு மட்டும் வாங்கிட்டு, ஏழு வருஷமா தன்னை நம்பிட்டு இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியினரை நட்டாற்றில் விட்ட கமல்ஹாசனை மனசுல வச்சுட்டு, நீங்க இதை சொல்றீங்களோ என்ற, 'டவுட்' வருதே!
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்: பல ஆண்கள் மோடி கோஷம் போடுகின்றனர். அதை, அவர்களது மனைவியர் தான் சரி செய்ய வேண்டும். உங்கள் கணவர் பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுவேன் என கூறினால், இனி சாப்பாடு கிடையாது என கூறுங்கள்.
டவுட் தனபாலு: டில்லியில இருக்கிற ஏழு லோக்சபா தொகுதிகள்லயும், பா.ஜ.,வே மூன்றாவது முறையாகவும் ஜெயிக்கும்னு கருத்து கணிப்புகள் வருது... இனி, அவங்களுடன் மோதி ஜெயிக்கிறது சிரமம்னு உணர்ந்துட்டு தான், இப்படி குடும்பத்துக்குள்ள, 'குண்டு' வைக்கிற வேலையில இறங்கிட்டீங்களோ என்ற, 'டவுட்' வருது!
பத்திரிகை செய்தி: தி.மு.க., கூட்டணியில், சி.பி.எம்., - சி.பி.ஐ., - வி.சி., கட்சிகளுக்கு தலா இரண்டு இடங்கள் ஒதுக்கியுள்ள நிலையில், ம.தி.மு.க.,வுக்கு மட்டும் ஒரு இடம் வழங்கியுள்ளது, அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
டவுட் தனபாலு: அகில இந்திய அளவுலயே, 'வீக்'கா இருக்கிற கம்யூ.,க்களுக்கே ரெண்டு சீட் தந்த தி.மு.க., தரப்பு, ம.தி.மு.க.,வுக்கு மட்டும் ஒரு சீட் தந்தது ஏன்...? 2016ல், மக்கள் நல கூட்டணியை அமைச்சு, ஸ்டாலின் முதல்வராவதை தடுத்த வைகோவை இப்படி பழிவாங்குறாங்களோ என்ற, 'டவுட்'தான் எழுது!

