PUBLISHED ON : பிப் 21, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: பன்னீர்செல்வம் ஒரு கொசு. நாட்டில் பல பிரச்னைகள் இருக்கும்போது, கொசு குறித்து பேச நேரமில்லை. தேர்தலில் அ.தி.மு.க.,வை வெற்றி பெற வைக்கும் ரகசியம், தன்னிடம் உள்ளதாக கூறியிருக்கிறார். 'நீட்' தேர்வை விலக்கும் ரகசியம் உள்ளது என, உதயநிதி கூறினார். தி.மு.க.,வுடன் கள்ளத்தொடர்பு வைத்ததால், அந்த நோய் பன்னீர்செல்வத்துக்கும் தொற்றி விட்டது.அவரது ஏமாற்று வேலை, அ.தி.மு.க., தொண்டர்களிடம் எடுபடாது.
டவுட் தனபாலு: சின்னஞ்சிறிய கொசு, எத்தனை பேரின் துாக்கத்தை கெடுக்குது என்பது இவருக்கு தெரியாதா...? அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னம் வழக்கு, தேர்தல் கமிஷனில் நிலுவையில் இருப்பதும், பன்னீர்செல்வம் பா.ஜ., கூட்டணியில் இருப்பதையும் இவர் மறந்துட்டாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
பத்திரிகை செய்தி: திருநெல்வேலியில், கடந்த 7ம் தேதி நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இது தொடர்பாக, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், பா.ஜ.,வை சேர்ந்த வழக்கறிஞர் மணி அளித்த புகாரில், 'முதல்வர் ஸ்டாலினை வரவேற்க, வயதான பெண்களை லாரிகளில் அழைத்து வந்தது மனித உரிமை மீறல். லாரிகளில் அழைத்து வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
டவுட் தனபாலு: கடந்த 2023ல் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், வாக்காளர்களை பட்டியில், ஆடு, மாடுகளை போல அடைச்சு வச்சு ஓட்டு கேட்டாங்களே... அதை விட, லாரிகளில் மூதாட்டிகளை அழைச்சுட்டு போனது, பெரிய மனித உரிமை மீறலா என்ற, 'டவுட்' வருதே!
பத்திரிகை செய்தி: தமிழக காங்கிரசில் உள்ள அதிருப்தி மாவட்ட தலைவர்கள், 25 பேர் தனி கோஷ்டியாக செயல்படுவதுடன், டில்லி சென்று தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம், மாநில தலைமை மீது புகார் அளித்தனர். மாநில தலைவரை மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
டவுட் தனபாலு: அப்பாடா... தமிழக காங்., தலைவராக செல்வப்பெருந்தகையை நியமிச்சு ஒன்றரை வருஷமாகிடுச்சு... இனியும், அவரை மாத்தணும்னு கோஷ்டிகள் கொடி பிடிக்காம இருந்தா, தமிழக காங்கிரஸ் இயங்குதா என்ற, 'டவுட்' மேலிடத்துக்கே வந்திருக்கும்... இனிமே, மேலிடம் நிம்மதியா இருக்கும் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!

