PUBLISHED ON : அக் 28, 2026 12:00 AM

த.வெ.க., கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத்: தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், ‘ஒப்பந்ததாரர்கள் கூட்டத்தை கூட்டி, எந்த நிதியும் பெற தேவையில்லை; சாலைகள் தரமாக இருந்தால் மட்டும் போதும்’ என, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நான் வியந்து தான் பேசினேன். ஆனால், நான் அமைச்சர் ஆதவ் குறித்து தவறாக பேசியதாக வெளியாகும் செய்தியை, யாரும் நம்ப வேண்டாம். த.வெ.க.,வில் கொள்கை பரப்பு செயலராக கடமையாற்றும் நான், கண் மூடும் வரை; கல்லறைக்கு போகும் வரை, இந்த கடமையை செய்வதற்கு என்னை அர்ப்பணிக்கிறேன். என்னை களங்கப்படுத்தும் எந்த முயற்சியும் வெற்றி பெறாது.
டவுட் தனபாலு: நீங்க ஆரம்பத்துல தி.மு.க.,வுல இருந்தீங்க... அப்புறம் ம.தி.மு.க.,வுக்கு போயிட்டு, திரும்பவும் தி.மு.க.,வுக்கு வந்தீங்க... அங்கிருந்து அ.தி.மு.க., அப்புறமா அ.ம.மு.க.,ன்னு ஒரு சுத்து சுத்திட்டு மறுபடியும் தி.மு.க., ஆதரவாளரா வலம் வந்தீங்க... இப்ப, த.வெ.க.,வில் இருக்கீங்க... உங்க பழைய வரலாறு தானே உங்க மீது, ‘டவுட்’களை கிளப்புது!
lll
பத்திரிகை செய்தி: நடிகர் தனுஷ், தன் நற்பணி இயக்க பெண் நிர்வாகிகளை சென்னையில் சந்தித்து பேசினார். அப்போது, அவர்களுக்கு வெள்ளி காமாட்சி விளக்குகளை பரிசளித்தார். பின் தனுஷ் பேசுகையில், ‘இயக்கத்தில் பெண் உறுப்பினர்களை அதிகமாக சேர்க்க வேண்டும். நாம் யாருக்கும் எதிரி இல்லை. களப்பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும் தொடர்ச்சியாக செய்வோம்’ என்றார்.
டவுட் தனபாலு: நடிகர் விஜய் முதல்வரானாலும் ஆனாரு... எல்லா நடிகர்களுக்கும் அந்த நாற்காலி மீது பெரிய மோகமே உருவாகிடுச்சு என்பது, ‘டவுட்’ இல்லாம தெரியுது... 100 பெண்களுக்கு வெள்ளி காமாட்சி விளக்குகள் குடுத்துட்டா, கோட்டைக்கு போயிடலாம்னு தனுஷிடம் யார் சொல்லியிருப்பாங்க என்ற, ‘டவுட்’ தான் வருது!
lll
த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன்: ரேஷன் அரிசியை தீட்டி, சன்ன ரக அரிசி என 30 ரூபாய்க்கு விற்பதாகவும், அந்த அரிசியை வாங்க முறையாக, ‘டெண்டர்’ அறிவிக்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கூறும் குற்றச் சாட்டுக்கு, நேரம் வரும்போது உரிய பதில் அளிக்கப்படும்.
டவுட் தனபாலு: ‘உதயநிதி கூறும் குற்றச்சாட்டில் துளியும் உண்மையில்லை... நாங்க சன்ன ரக அரிசியை தான் விற்பனை செய்றோம்’னு பளிச்சுன்னு பதிலடி தராம, ‘நேரம் வரும்போது உரிய பதில் தரப்படும்’னு நீங்க சொல்றது, உதயநிதி குற்றச்சாட்டு உண்மை தானோ என்ற, ‘டவுட்’டை ஏற்படுத்துதே!
lll
