PUBLISHED ON : மார் 20, 2025 12:00 AM

கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி: வரும் 2026ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன், கள் இறக்க அனுமதிப்பது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லா விட்டால், தி.மு.க., மீண்டும் ஆட்சியில் அமர முடியாது. அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, கள் விவகாரத்தை கையில் எடுத்தால், அவர் ஆட்சியை கைப்பற்றக்கூடும்.
டவுட் தனபாலு: அ.தி.மு.க., - தி.மு.க., என்னதான் ஏட்டிக்கு போட்டியா அடிச்சுக்கிட்டாலும், 'டாஸ்மாக்' விவகாரத்தில் மட்டும் ரெண்டு பேரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்... அதனால, பழனிசாமியிடம் இருந்து கள்ளுக்கு சாதகமான பதில் எதுவும் உங்களுக்கு வரவே வராது என்பதில், 'டவுட்'டே இல்லை!
தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா: தமிழக மக்கள் நலன் சார்ந்த சில விஷயங்களில், தி.மு.க.,வுடன் இணைந்து செயல்படுவோம். சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து, எனது அடுத்த பிறந்த நாளில் அறிவிப்பேன். தற்போதைய கூட்டணியில், எந்த குழப்பமும் இல்லை; நாங்கள் தெளிவாக இருக்கிறோம். வரும் தேர்தலில், தே.மு.தி.க., இடம்பெறும் கூட்டணி, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
டவுட் தனபாலு: இப்ப, நீங்க எந்த கூட்டணியில் இருக்கீங்க என்பதை தெளிவா சொல்ல மாட்டேங்கிறீங்களே... வழக்கம் போல, தி.மு.க., - அ.தி.மு.க.,ன்னு ரெண்டு கட்சிகளுக்கும், 'ஆபர்' கொடுக்க இப்பவே தயாராகுறீங்க என்பது மட்டும், 'டவுட்'டே இல்லாம தெரியுது!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: திருச்செந்துார் கோவிலில், கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியை சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அடுத்து ராமேஸ்வரம் கோவிலில், வடமாநில பக்தர் ஒருவர் உயிரிழந்து இருக்கிறார். திருச்செந்துார் கோவிலில் உயிரிழந்தவருக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லை என்று சமாளித்த ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, இதற்கு என்ன கதை வைத்திருக்கிறார்?
டவுட் தனபாலு: 'காசிக்கு அடுத்து பிரசித்தி பெற்ற புண்ணிய தலம் ராமேஸ்வரம்... அதனால, உயிர் போகும் நிலையில் இருந்த அந்த பக்தர், அங்க வந்து இறந்து சொர்க்கத்துக்கு போயிட்டார்'னு அமைச்சர் தரப்புல இருந்து பதில் வந்தாலும், 'டவுட்'படாம ஏத்துக்கணும்!