PUBLISHED ON : ஏப் 03, 2025 12:00 AM

தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன்: மத்திய அரசின், 100 நாள் வேலை திட்டம் மூலம் கிராமங்களில் பணப்புழக்கம் இருந்தது. அதற்கு, மத்திய அரசு நான்கு மாதங்களாக நிதிதர மறுக்கிறது. தமிழகத்தை, மத்திய அரசு வஞ்சிக்கிறது. தமிழகம் எல்லா துறைகளிலும் வளர்ச்சி பெறுவது, பா.ஜ., அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் பிடிக்கவில்லை.
டவுட் தனபாலு: தொழில் துவங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் இருந்து, தமிழகத்தின் பெயரையே துாக்கிட்டாங்க... தமிழகத்துக்கு வர திட்டமிட்ட தொழில்கள் எல்லாம் அண்டை மாநிலங்களுக்கு போயிட்டு இருக்குது... வளர்ச்சி என்பது, 'டாஸ்மாக்' மது விற்பனையில் மட்டும் தான் இருக்கு என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை!
தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி: அ.தி.மு.க., நன்றாக இருக்க வேண்டும் என்பது தான், எங்கள் அடிப்படை எண்ணம். சட்டசபையில் எதிர்க்கட்சி குறித்து முதல்வர் விமர்சித்து பேசினார். பின், 'அதில் அவர்களுக்கு வருத்தம் என்றால், அதை நான் திரும்ப பெறுகிறேன்' என்றும் சொன்னார். முதல்வரும், அந்த கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்.
டவுட் தனபாலு: அ.தி.மு.க., நன்றாக, வலுவாக இருந்தால் தான், பா.ஜ.,வால இங்கு காலுான்ற முடியாது... அதுதான் தி.மு.க.,வுக்கும் லாபமாக அமையும்... அதனால தான், இந்த நாலு வருஷமா அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களின் ஊழல் புகார்கள் மீது தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கலை என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: வரும் தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எதையும் செய்வார். ஆகையால், கட்சியினர் முக்கிய விஷயங்களை மொபைல் போன்களில் பேசுவதை தவிர்த்து விடுங்கள். அதை பதிவு செய்து, அதை வைத்து கட்சியை பிளவுபடுத்த பார்ப்பார் அமித் ஷா. அவர் ரொம்பவும் டேஞ்சரானவர்; அதனால், அவரிடம் நாமெல்லாம் ரொம்பவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
டவுட் தனபாலு: 'ஆளுங்கட்சியினர் கட்டிங், கமிஷன் விவகாரங்களை நேருக்கு நேரா பார்த்து பேசிக்கணும்... அதை விட்டுட்டு, போன்ல பேசி ஏடாகூடமா மாட்டிக்காதீங்க' என்பதையே இப்படி நாசுக்கா சொல்றாரோ என்ற, 'டவுட்'தான் வருது!

