PUBLISHED ON : ஏப் 04, 2025 12:00 AM

மலையாள நடிகரும், மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி: எம்புரான் படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட்டது, படத்தை ஓட வைப்பதற்கான விளம்பர யுக்தி. 'காட்சிகளை நீக்குங்கள்' என யாரும், படத் தயாரிப்பு குழுவிடம் கேட்கவில்லை. அவர்களாகவே நீக்கி உள்ளனர்.
டவுட் தனபாலு: நீங்க சொல்றது சரிதான்... படம் ஓடுமோ, ஓடாதோ என்ற, 'டவுட்' படக் குழுவினருக்கு வந்துட்டா, இந்த மாதிரி ஏடாகூடமான பிரச்னைகளை படத்துல வச்சுட்டு, இலவச விளம்பரம் தேடுறது இப்ப எல்லா மொழி சினிமாக்கள்லயும் நடக்குது... அதுக்கு, 'எம்புரான்' படமும் விதிவிலக்கல்ல என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழ்நிலை இன்னும் ஏற்படவில்லை; அதற்கு நீண்ட காலம் உள்ளது. ஒருவேளை திராவிட கட்சிகளான, அ.தி.மு.க., - தி.மு.க., பலவீனப்படுகிறது என வைத்து கொள்வோம். அந்த சூழலில் மட்டுமே, தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு உருவாகும்.
டவுட் தனபாலு: தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., பலவீனப்பட்டால் தான், கூட்டணி ஆட்சி வரும்னு சொல்றீங்களே... உங்களை மாதிரி சின்ன சின்ன கட்சிகள், அந்த கட்சிகளுக்கு பக்கபலமா இருக்கும் வரை, அந்த கட்சிகள் பலவீனப்படாது... உங்களது கூட்டணி ஆட்சி கனவும் நனவாகாது என்பதில், 'டவுட்'டே இல்லை!
மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்: அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உள்ளது; அப்படிப்பட்ட சூழல் மாற வேண்டும். கடுமையாக உழைத்து, யாரெல்லாம் மக்கள் பணியாற்றி உள்ளனரோ, அவர்களே அரசியலுக்கு வர வேண்டும். சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு போதும் என நினைத்து, நடிகர்கள் பலரும் அரசியலுக்கு வர நினைக்கின்றனர்; அது தவறு. அரசியலுக்கு சினிமா தேவையில்லை; மக்களுக்கு தொண்டாற்றும் மனநிலை தான் முக்கியம். யாரையும் மனதில் வைத்து இதை குறிப்பிடவில்லை.
டவுட் தனபாலு: நீங்க யாரையும் மனதில் வைத்து சொல்லவில்லை என்றாலும், சினிமாவில் நடித்து, சட்டென அரசியலுக்குள் நுழைந்து, நான்கே ஆண்டுகளில் துணை முதல்வர் பதவி வரை உயர்ந்திருக்கும் உதயநிதியை தான் குறிப்பிடுறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!

