PUBLISHED ON : ஏப் 05, 2025 12:00 AM

தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா: 'தெலுங்கானாவில் ஆலை அமைக்கவில்லை' என, சீனாவின் மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான பி.ஒய்.டி.,யே தெரிவித்து விட்டது. எந்த ஒரு முதலீடும் தமிழகத்தில் இருந்து வெளியே செல்ல வாய்ப்பில்லை. இந்திய அளவில் முதலீட்டாளர்கள் முதலில் வரும் இடம் தமிழகம் தான். இங்கு தான், அனைத்து உள்கட்டமைப்புகளும், அரசின் முழு ஆதரவும் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் பொய் செய்திகளை பரப்புவது, கீழ்த்தரமான செயல்.
டவுட் தனபாலு: பி.ஒய்.டி., நிறுவனம் மறுப்பு தெரிவிச்சதும், இப்படி துள்ளி குதிக்கிறீங்களே... 'தொழில் துவங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் இருந்து தமிழகம் நீக்கம்' என்ற செய்தி வெளியாகி, பல நாட்களாகிடுச்சு... அதுக்கு உங்களிடம் இருந்து எந்த விளக்கத்தையும் காணோமே... உங்க மவுனமே, அது உண்மை தான் என்பதை, 'டவுட்' இல்லாம உணர்த்துதே!
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன்: தமிழக அரசு, கச்சத்தீவு தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மக்களை ஏமாற்ற நினைக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் தான் கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போதிருந்த தி.மு.க., அரசு மவுனம் காத்தது. இதுவரை கச்சத்தீவு பிரச்னைக்கும், மீனவர்கள் பிரச்னைக்கும் தி.மு.க., ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
டவுட் தனபாலு: மத்தியில், இந்திரா தலைமையில் காங்., ஆட்சி நடந்தப்ப தான், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தாங்க என்பதிலும், தி.மு.க., அரசு மவுனம் காத்தது என்பதிலும், 'டவுட்'டே இல்லை... ஆனா, அப்ப காங்கிரஸ்ல முக்கிய தலைவரா இருந்த உங்க தந்தை மூப்பனார், இதை எதிர்த்து ஏன் குரல் கொடுக்கலை என்ற, 'டவுட்'டும் கூடவே வருதே!
தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: கடந்த 75 ஆண்டு களாக, பல தலைவர்கள் நம்மை எதிர்த்து பேசியுள்ளனர். ஆனால், அப்படி பேசியவர்கள் அதில் உறுதியாக நின்றதில்லை. பின், நம்மிடமே திரும்பி வந்துள்ளனர். ஒரு காலத்தில், 'அறிவாலயத்தை கைப்பற்றுவேன்' என்று ஒருவர் சொல்லி கொண்டிருந்தார். பின் என்ன நடந்தது? அவர் இன்று அறிவாலயத்தோடு செட்டில் ஆகிவிட்டார். அப்படியொரு இயக்கமாக தி.மு.க., வளர்ந்திருக்கிறது.
டவுட் தனபாலு: உங்க முன்னாள் தலைவர் கருணாநிதியால் வெளியேற்றப்பட்ட வைகோ தான், 'அறிவாலயத்தைகைப்பற்றுவேன்'னு வீர முழக்கமிட்டாரு... அரசியல்ல அவர் எடுத்து வச்ச தப்பான அடிகளால, கடைசியில் உங்களிடமே தஞ்சம் புகுந்து, இன்று உங்களை போன்றவர்களின் கேலி, கிண்டலுக்கு ஆளாகிட்டு இருக்காரு என்பதில், 'டவுட்'டே இல்லை!

