PUBLISHED ON : ஏப் 09, 2025 12:00 AM

பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தின் பொருளாதார உற்பத்திக்கு, வெறும் 14 சதவீதத்தை மட்டும் கொண்ட சேவைத்துறை, 53 சதவீதம்; 26 சதவீதம் உடைய உற்பத்தித் துறை, 37 சதவீதம் பங்களித்துள்ளன. ஆனால், 60 சதவீத மக்களின் வாழ்வாதாரமான வேளாண் துறை, 10 சதவீதம் மட்டுமே பங்களித்துள்ளது. வேளாண் துறை முன்னேற வேண்டுமானால், ஆண்டுக்கு சராசரியாக 4 சதவீத வளர்ச்சி எட்டப்பட வேண்டும். ஆண்டுக்கு 6 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டால் தான், லாபம் தரும் தொழிலாக வேளாண்மை மாறும். அதை இலக்கு வைத்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
டவுட் தனபாலு: வேளாண் துறைக்கு என்று வருஷா வருஷம் தனி பட்ஜெட் போடுறாங்களே... அந்த பட்ஜெட் தாக்கல் பண்ற அன்னைக்கு, ஆளுங்கட்சியினர் பச்சைத்துண்டு அணியுறாங்களே... இதுலயே, வேளாண் துறை வளர்ச்சி அடைஞ்சிடும்னு நினைச்சுட்டு சும்மா இருந்துட்டாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி: ஒரு தலைவர், கட்சியை அவரது குடும்பம் போலவும், கட்சித் தொண்டர்களை குடும்ப உறுப்பினர்கள் போலவும் பார்க்க வேண்டும். உங்கள் பிள்ளைகளை நேசிப்பது போல் கட்சித் தொண்டர்களை நேசிக்க வேண்டும். நான் இன்று இருக்கும் நிலைக்கு ஏராளமான கட்சித் தொண்டர்களின் அர்ப்பணிப்பே காரணம்.
டவுட் தனபாலு: நீங்க சொல்றது சரிதான்... ஆனா, பல கட்சிகள்ல இது உல்டாவா அல்லவா நடக்குது... குடும்பத்தை மட்டுமே கட்சியாகவும், வாரிசுகளையே தொண்டர்களாகவும் பார்க்கிற கட்சிகள் தானே காஷ்மீர் துவங்கி கன்னியாகுமரி வரைக்கும் இருக்கு... அந்த வகையில, உங்க கட்சி வித்தியாசமானது தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: தமிழகத்தில், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் தான் கட்சிகள்; மற்றவை எல்லாம் கட்சிகள் இல்லை. அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் ஒரே அணியில் சேரும். நொண்டி, கூன், குருடு போன்றவர்களை சேர்த்துக்கொண்டு, தி.மு.க.,வை எதிர்க்கப் பார்க்கின்றனர். அவற்றை எல்லாம் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
டவுட் தனபாலு: அது சரி... கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசை வீழ்த்த, பெரிய கட்சிகள் தேவையில்லை... 'வீக்'கா இருக்கும் சின்னச் சின்ன கட்சிகளே போதும்... தி.மு.க.,வை சுலபமா வீழ்த்திடலாம்'னு எதிர்க்கட்சிகள் நினைச்சிருக்குமோ என்ற, 'டவுட்' இவருக்கு வரலையா?

