PUBLISHED ON : ஏப் 11, 2025 12:00 AM

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்:கடந்த இரண்டு ஆண்டுகளாக, பாம்பு கடிக்கு ஏ.எஸ்.வி., என்ற மருந்தும், நாய்க்கடிக்கு ஏ.ஆர்.வி., என்ற மருந்தும் துணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதனால், 34,850 பேர் பாம்பு கடிக்கு ஊசி போடப்பட்டு, பாதுகாக்கப்பட்டு உள்ளனர். இதேபோல, 9.60 லட்சம்பேருக்கு நாய்க்கடிக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: நாய் கடிச்ச பிறகு ஊசி போடுவதற்கு பதிலாக, தெருநாய்களை கட்டுப்படுத்த ஒரு திட்டத்தை அமல்படுத்தியிருந்தால், 'டவுட்'டே இல்லாம இவரை பாராட்டலாம்!
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி: பா.ஜ., கூட்டணியை அ.தி.மு.க., உடனே அறிவிக்க வேண்டும். இல்லையென்றால், மாநில அரசின் அதிகாரம், வலுவான கூட்டணி, எல்லையற்ற பணத்தின் முன் காணாமல் போய்விடும். வரும் சட்டசபை தேர்தலில் தோற்றால், அ.தி.மு.க.,வை யாராலும் காப்பாற்ற முடியாது.
டவுட் தனபாலு: வாஸ்தவம்தான்... எப்பவுமே தேர்தல் பணிகளில், ஜெ., தான் முன்னணியில் இருப்பார்... மற்ற கட்சிகள் கூட்டணி பேச்சு நடத்திட்டு இருக்கிறப்ப, ஜெ., வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பிரசாரத்துக்கே கிளம்பிடுவார்... அவர் வழி வந்த பழனிசாமி, கூட்டணி விஷயத்தில் தாமதிக்காம, சட்டுபுட்டுன்னு முடிவெடுக்கணும் என இவர் சொல்வதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின், 'நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்தால் தான், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்போம் என, அ.தி.மு.க., நிபந்தனை விதிக்க தயாரா?' என, கேட்டுள்ளார். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டாமல் இருந்தால் தான், காங்கிரசுடன் கூட்டணி என்றும், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 152 அடி வரை உயர்த்தினால் தான் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி என்றும், முதல்வர் ஸ்டாலின் நிபந்தனை விதிக்க தயாரா?
டவுட் தனபாலு: சபாஷ், சரியான பதிலடி... தி.மு.க.,வினர் அப்படி எல்லாம் நிபந்தனைகள் விதிக்க மாட்டாங்க... தப்பி தவறி விதிச்சாலும், அந்த கட்சிகள் எல்லாம், 'எங்களுக்கு மாநில நலன் தான் முக்கியம்... நீங்க வேணும்னா கூட்டணியில் இருந்து வெளியேறலாம்'னு வாசலை காட்டிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

