PUBLISHED ON : ஏப் 13, 2025 12:00 AM

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் உறவினர்கள், முன்னாள் அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்களில், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை நடத்திய சோதனைகள் எல்லாம் என்னவாயின என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வாரா? அந்த ஊழல் புகார்களை வைத்து கூட்டணி பேரம் நடத்தினர். பா.ஜ.,வின் கூட்டணிக்கு ஊன்றுகோலாக ஊழல்கள்தான் இருக்கின்றன.
டவுட் தனபாலு: சரி விடுங்க... மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி, மாநில கட்சிகளை மிரட்டி கூட்டணி வைப்பது சகஜம்தானே... 2011 சட்டசபை தேர்தலில், உங்க கட்சியினர் வீடுகள்லயும் அமலாக்கத் துறை, வருமான வரி சோதனைகளை மத்திய காங்., அரசு நடத்தி, உங்க கட்சி தலைமையை மிரட்டி, கூட்டணியில், 63 சட்டசபை தொகுதிகளை வாங்கியதை மறந்துட்டு பேசுறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
பத்திரிகை செய்தி: தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக கூறியும், வக்ப் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்த மத்திய அரசைக் கண்டித்தும், சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரசார் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதல் பங்கேற்ற, 175 பேரை போலீசார் கைது செய்தனர்.
டவுட் தனபாலு: சென்னை மாநகராட்சியில், 200 வார்டுகள் இருக்கு... வார்டுக்கு ஒரு நிர்வாகி வந்திருந்தால் கூட, 200 பேர் இருக்குமே... மாநில தலைவர் தலைமையில் நடந்த போராட்டத்துலயே, 175 பேர் மட்டும் கலந்துக்கிட்டு, தமிழக காங்., கட்சியின் பலத்தை, 'டவுட்'டே இல்லாம காட்டிக் கொடுத்துட்டாங்களே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மாற்றப்பட்டதில் எங்களுக்கு சந்தோஷமும் இல்லை, வருத்தமும் இல்லை. 'அண்ணாமலையை மாற்றுங்கள்' என, எங்கள் கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமியும் சொல்லவில்லை. முன்னாள் முதல்வர் ஜெ., எட்டடி பாய்ந்தார். பழனிசாமி, 16 அடி பாய்வார். ஜெயலலிதா சிங்கம்; பழனிசாமி சிங்கக்குட்டி. 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையில் ஆட்சி அமையும்.
டவுட் தனபாலு: ஜெ.,யை விட, பழனிசாமி உயர்ந்தவரா என்ன... தேசிய கட்சிகளின் டில்லி தலைவர்கள், கூட்டணி பேசுவதற்காக சென்னைக்கு வந்து, ஜெ., வீட்டில் பல மணி நேரம் காத்து கிடப்பாங்க... ஆனா, 16 அடி பாயும் பழனிசாமி, டில்லிக்கு போய் அல்லவா கூட்டணி பேசிட்டு வந்தாரு... ஜெ., என்ற மாபெரும் ஆளுமைக்கு நிகராக உங்க கட்சியில் யாரும் இல்லை என்பதுதான், 'டவுட்' இல்லாத உண்மை!

