PUBLISHED ON : ஏப் 14, 2025 12:00 AM

தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன்: ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில், மாற்றுத்திறனாளிகளை பழைய பெயரை வைத்தே உச்சரித்து விட்டேன். இதை முதல்வர் ஸ்டாலின், என் கவனத்திற்கு எடுத்து வந்த போது, அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். கருணாநிதியால் வளர்க்கப்பட்ட நானே, இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப்பெரிய தவறு. முதல்வருக்கு என் வருத்தத்தை தெரிவித்து, இனி, இத்தகைய நிகழ்வு நடக்காது என, உறுதி அளிக்கிறேன்.
டவுட் தனபாலு: உங்க பிரச்னை ஒரு வழியா முடிஞ்சதுன்னு முதல்வர் நிம்மதி பெருமூச்சு விடுறதுக்குள்ள, பொன்முடி ஆரம்பிச்சுட்டாரு... கட்சியில், உதயநிதியின் வளர்ச்சியை பொறுத்துக்க முடியாத, 'சீனியர்கள்' எல்லாம் சேர்ந்து, தலைமையை வம்புல மாட்டி விடணும் என்று திட்டமிட்டே களமாடுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன்: 'புனித வெள்ளி நாளில் மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக சட்டசபையில் பேச வேண்டும்' என, எங்கள் கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமியிடம் கேட்டேன். 'அ.தி.மு.க., ஆட்சியில் ஏன் இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை' என, தி.மு.க.,வினர் எதிர்கேள்வி எழுப்புவர். அது, நமக்கே சிக்கலாகும். அதனால், இக்கோரிக்கையை எழுப்புவது சிரமம்' என கூறி விட்டார்.
-டவுட் தனபாலு: அது சரி... தினமும் சட்டசபைக்கு போயும், பேச முடியாம தவிக்கிற பழனிசாமிக்கு தானே கஷ்ட, நஷ்டங்கள் தெரியும்... 'அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், புனித வெள்ளி மட்டுமல்ல; 365 நாளும், 'டாஸ்மாக்' கடைகளை இழுத்து மூடுவோம்'னு வாக்குறுதி தந்து பாருங்க... ஒட்டுமொத்த பெண்களின் ஓட்டுகளும், 'டவுட்'டே இல்லாம உங்க கட்சிக்கு தான் விழும்!
அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலர், டாக்டர் சரவணன்: 'நீட்' தேர்வுக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, ப.சிதம்பரத்தின் மனைவி நளினி வாதாடினார். 'எந்த சூழ்நிலையிலும், இனி யாராலும், நீட் தேர்வை ஒழிக்க முடியாது' என்று பேட்டியும் கொடுத்தார். அப்போது, அதை ஸ்டாலின் கண்டித்தாரா... தற்போது அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, 'நீதிமன்றம் செல்வோம்' என்கின்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று தெரிந்தும், தமிழக மாணவர்கள் எதிர்காலத்தோடு, தி.மு.க., விளையாடுகிறது.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... நீட் தேர்வு விவகாரம் முடிஞ்சு போன விஷயம்... அதனால், 1960களில் திராவிட நாடு கொள்கையை அண்ணாதுரை எப்படி துணிச்சலாக கை கழுவினாரோ, அதே போல நீட் தேர்வையும், 'ஈகோ' பார்க்காம, தி.மு.க., ஏத்துக்கிட்டு, நம் மாணவர்களை அதற்கு தயார்படுத்தணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

