PUBLISHED ON : ஏப் 17, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: ஒட்டுமொத்த உலகமும், தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், 'தமிழ் மொழியின் காவலன்' என, வீராப்பு காட்டும் முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு வாழ்த்து கூறாமல் புறக்கணித்துள்ளார். ஆங்கில புத்தாண்டிற்கு வாழ்த்து மடல் எழுதும் முதல்வருக்கு, தமிழர்களின் கலாசார கொண்டாட்டமான, தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்து கூற மனமில்லையா?
டவுட் தனபாலு: முதல்வர் தரப்பு, தை முதல் தேதியை தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடும்... ஆனா, அவங்க குடும்ப தொலைக்காட்சிகள்ல, 'சித்திரை முதல் நாள் கொண்டாட்டம்'னு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும்... தொழில் விஷயத்துல கொள்கையை எல்லாம் துாக்கி கடாசிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் அறிக்கை: 'சமூக நீதி குறித்து பேசும் தமிழகத்தில், செருப்பு போட்டு நடப்பதற்காகவும், இரு சக்கர வாகனத்தில் செல்வதற்காகவும், தலித்துகள் தாக்கப்படுகின்றனர்' என்ற பச்சை பொய்யை, கவர்னர் ரவி சொல்லி இருக்கிறார். பட்டியல் ஜாதியினருக்கு எதிரான குற்றங்களில், பீஹார் இரண்டாம் இடத்தில் உள்ளது. கவர்னரின் சொந்த மாநிலத்தில் இப்படி அநீதி நடக்கும்போது, தமிழகம் குறித்து பேச அவருக்கு தகுதியே கிடையாது. பீஹாரில் பா.ஜ., தயவில் தான் ஆட்சி நடக்கிறது. அதை கண்டித்து கவர்னரால் பேச முடியுமா?
டவுட் தனபாலு: பீஹாரில் என்ன நடக்குதோ தெரியாது... ஆனா, கவர்னர் ரவி, தமிழகத்தில் தானே பதவியில் இருக்காரு... ஆட்சியை கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கும் அவர், இங்க நடக்கும் ஜாதிய பேதங்களை பற்றி பேசினால், அதற்கு விளக்கம் தருவதற்கு பதிலாக, வேற மாநிலங்களை உதாரணம் காட்டுவது முறையா என்ற, 'டவுட்' வருதே!
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: பிரதமர் மோடிக்கும், விஜயகாந்திற்கும் இடையிலான உறவு, அரசியலையும் தாண்டிய உறவு. விஜயகாந்தை, 'தமிழகத்தின் சிங்கம்' என, பிரதமர் அன்பாக அழைப்பார். விஜயகாந்த் உடல்நலம் குறித்து, ஒரு சகோதரரை போல கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்பு கொண்டு நலம் விசாரிப்பார். 'நான் உங்கள் மூத்த சகோதரனை போல்' என பிரதமர் கூறியதை, எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம்.
டவுட் தனபாலு: விஜயகாந்தின் பிறந்த நாள், நினைவு நாள்னு எதுவும் பக்கத்துல இல்லையே... அப்புறம் ஏன் விஜயகாந்த் - மோடி நட்பு பற்றி பிரேமலதா இப்படி உணர்ச்சிவசப்படுறாங்க... பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி உறுதியான பிறகு இப்படி உருகுவது, அந்த கூட்டணியில் இடம்பிடிக்க போடும் அச்சாரமோ என்ற, 'டவுட்'டை ஏற்படுத்துதே!