PUBLISHED ON : ஏப் 18, 2025 12:00 AM

பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி: பா.ம.க., சார்பில் தொடர்ந்து பல ஆண்டுகளாக, மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு மாநாட்டை நடத்தி வந்தோம். அதன் தொடர்ச்சியாக, மே 11ம் தேதி, சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடக்க உள்ளது. பா.ம.க.,வில் சிறு சலசலப்பு ஏற்பட்டது; இப்போது சரியாகி விட்டது. அதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. மாமல்லபுரம் மாநாட்டில், ராமதாசும், அன்புமணியும் ஒன்றாக கலந்து கொள்வர்.
டவுட் தனபாலு: 'பா.ம.க., வுக்கு நான் தான் தலைவர்'னு ராமதாஸ் அறிவிச்சாரு... அன்புமணி, 'இல்ல இல்ல நான் தான் தலைவரா நீடிக்கிறேன்'னு சொன்னாரு... நீங்களோ, 'பிரச்னை முடிஞ்சிட்டு'ன்னு சொல்றீங்க... பா.ம.க., தொண்டர்கள் யார் பேச்சை நம்புறதுன்னு தெரியாம மண்டை காய்ந்து கிடக்குறாங்க என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை!
தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: மாநில சுயாட்சி தீர்மானத்தை, முன்னாள் முதல்வர் கருணாநிதி, 1974ம் ஆண்டு கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தில் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்போது, 50 ஆண்டுகளுக்கு பின், முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திலும் பேசும் வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. நான் நீண்ட நெடிய காலம் அரசியலில் இருக்கிறேன். நாளைக்கு, உதயநிதி சுயாட்சி தீர்மானம் கொண்டு வந்தாலும் பேசுவேன்.
டவுட் தனபாலு: இதன் வாயிலாக, சபையோருக்கு தாங்கள் சொல்ல வரும் கருத்து 'இப்ப, ஸ்டாலின் போட்ட தீர்மானத்தால எல்லாம் சுயாட்சி கிடைச்சுடாது... அடுத்து, உதயநிதி ஆட்சிக்கு வந்தும் தீர்மானம் போட வேண்டியிருக்கும்' என்பதையே சுத்தி வளைச்சு சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக சட்டத்துறை அமைச்சர்ரகுபதி: மாநில அரசுகளின் உரிமைகளை மீட்டெடுக்க, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில், உயர்நிலைக் குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., வழக்கம்போல் வெளிநடப்பு செய்து விட்டது. தமிழக மக்களின் உரிமைகளில், மாநில சுயாட்சியில் அவர்களுக்கு என்றுமே அக்கறையில்லை.
டவுட் தனபாலு: மாநில சுயாட்சி பற்றி இப்ப இவ்வளவு பேசுறீங்களே... மத்திய பா.ஜ., அரசு மற்றும் காங்., அரசுகளில் பல ஆண்டுகள் அங்கம் வகித்து, நீங்க உட்பட பலர் மத்திய அமைச்சர் பதவிகளை அனுபவித்தீங்களே... அப்ப எல்லாம், அவங்களிடம் மாநில சுயாட்சியை கேட்டு வாங்க மறந்தது ஏன் என்ற, 'டவுட்' வருதே!

