PUBLISHED ON : ஏப் 22, 2025 12:00 AM

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: அ.தி.மு.க., கூட்டணியில், த.வெ.க., தரப்பில் 90 சீட், துணை முதல்வர் பதவி கேட்டனர் என்பது உண்மை தான். ஆனால், துணை முதல்வர் பதவியை தர முடியாது என்று கூறியிருக்க மாட்டார்கள். ஏனெனில், இதெல்லாம் என்னிடமும் பேசப்பட்டது தான். அங்கும் அதைத்தான் பேசி இருப்பர். பேச்சில் உடன்பாடு ஏற்படாததால் பிரிந்திருப்பர். ஏதேதோ நடக்குது; நல்லது நடந்தால் சரிதான்.
டவுட் தனபாலு: கிராமங்கள்ல, 'பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்'னு பேசுவாங்க... உங்க கட்சியையும், விஜய் கட்சியையும் அ.தி.மு.க., ஒரே தட்டில் வைத்து தான் பார்க்கிறது என்ற உங்க வாதத்தை, உங்க கட்சியின் தம்பிகள் கூட ஏத்துக்குவாங்களா என்பது, 'டவுட்' தான்!
தமிழக முதல்வர் ஸ்டாலின்: துணை முதல்வராக உதயநிதியின் செயல்பாடுகளை, இந்தியாவே உற்று நோக்கிக் கொண்டி ருக்கிறது. அவர் எப்படி செயல்படுகிறார் என கேட்டால், ஆட்சி அதிகாரத்தில் எனக்கு துணையாக இருந்து சிறப்பாக செயல்படுகிறார்; தமிழக மக்களுக்கும் சேவை செய்து, அரசு திட்டங்கள் முழுமையாக சென்றடைய உதவுகிறார்.
டவுட் தனபாலு: உங்க கட்சியில் துரைமுருகன், நேரு உள்ளிட்ட எத்தனையோ சீனியர்கள் இருந்தும், கட்சியிலும், ஆட்சியிலும் ரொம்பவே ஜூனியரான உதயநிதி தான் உங்களுக்கு உறுதுணையா இருக்கார்னு சொல்றீங்களே... இதன் வாயிலாக, 'இனி உதயநிதி தான் கட்சியில எல்லாம்' என்பதை, 'டவுட்'டே இல்லாம விளக்கிட்டீங்க!
அ.தி.மு.க., தேர்தல் பிரிவு செயலர் ஜெயராமன்: அ.தி.மு.க., வின் அஸ்திவாரமே தாய்க்குலங்கள் தான். ஆனால், தி.மு.க.,விலோ நேர் எதிர். பெண்களை கேவலமாக பேசுகின்றனர்; விமர்சிக்கின்றனர். அதற்கு பொன்முடி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என ஏராளமானோர் அங்கு உள்ளனர். இன்னும் 10 அமாவாசை மட்டுமே பொறுத்திருங்கள். தி.மு.க., ஆட்சி போய், பழனிசாமி முதல்வராக பதவியேற்றவுடன், அனைத்து தாய்மார்களுக்கும் மாதம் 2,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்.
டவுட் தனபாலு: மகளிர் உரிமைத் தொகையை மாதம், 2,000 ரூபாய் தருவோம்னு சொல்லிட்டீங்க... இந்த வாக்குறுதியை ஆட்சியில் இருக்கும் தி.மு.க., அடுத்த வருஷமே நிறைவேற்றி விட்டால், நீங்க, 3,000 ரூபாய் தருவோம்னு வாக்குறுதி தருவீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!